'வாசகர் வட்டம்' - சிறப்பாக செயல்பட...
இன்றைக்கு அனைத்து நூலகங்களிலும் வாசகர் வட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது. வெளிப்படையான நூல் கொள்முதல் திட்டத்தின்படி, நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் மட்டுமல்லாது, பருவ இதழ்களும் வாசகர்களின் விருப்பம் அறிந்து வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பொது நூலக இயக்குநர் அவர்கள் அறிவிப்புகளில் வாசகர் வட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நூலகத்திற்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்க வாசகர் வட்டத்தின் தீர்மானம் அவசியம் என்றும், தீர்மானத்தின் நகல் நூல் கொள்முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ புதிய நடைமுறை என்று பல நூலகர்கள் சொல்கிறார்கள். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் புத்தகங்கள்/ பருவங்கள் வாங்குவதை நூலகர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
நூலகங்களை இயக்குபவர்களாக மட்டும் இருந்து வந்த பொது நூலகத்துறை நூலகர்களுக்கு நிர்வாகத்தில் பங்குபெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது; மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.
பெரும்பாலான நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்பு இயங்குவதில்லை. ஆண்டு ஆய்வுக்காக வாசகர் வட்டம் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
ஆனால், சில நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. நூல் அறிமுகம், நூல் வெளியீடு, வாசிப்பு நிகழ்ச்சிகள் , கருத்தரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக சில நூலகங்களில் நடத்தப்படுகின்றன. இதை எல்லாம் அந்தந்த நூலகரால் மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை. நூலகர்கள் தொடர்பில் இருக்கும் இலக்கிய அமைப்புகள்தான் இவற்றையெல்லாம் சிறப்பாக செய்கின்றன.
நூலகங்களில் வாசகர் வட்டம் அமைப்பு சிறப்பாக செயல்பட எளிதான வழி, அந்தந்த ஊர்களில் உள்ள இலக்கிய அமைப்பினரையும், இலக்கிய ஆர்வலர்களையும் நூலகத்திற்கு வரவழைப்பதுதான்.
எல்லாப் பகுதிகளிலும் இலக்கிய அமைப்புகள் உள்ளன. இவர்கள் கூட்டம் நடத்த இடவசதி இல்லாமல் தடுமாறுகின்றனர்.
இவர்கள் இலக்கியக் கூட்டங்கள் நடத்திக் கொள்ள நூலகத்தில் இடம் கொடுத்தால் போதும்; அவர்கள் நூலகத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். அவர்களையே வாசகர் வட்ட நிர்வாகிகளாக நியமித்துக் கொள்ளலாம். அவர்களே நம்மை அழைத்து கூட்டங்கள் நடத்துவார்கள். கூட்டம் நடத்தும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
மாவட்டப் படைப்பாளர்களையும், பதிப்பாளர்களையும்,
இலக்கிய அமைப்புகளையும் நூலகர்கள் கண்டுகொள்வதில்லை என்று நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. நாமே இவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால் வேறு யார்தான் இவர்களை
கொண்டாடுவார்கள்?
- நூலகர் சி. சரவணன்.
Comments