நூலகங்களுக்கான பருவ இதழ்கள் ஆன்லைன் பதிவேற்றமும், நடைமுறைச் சிக்கல்களும்

    ‘நூலகங்களுக்கு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொள்முதல் செய்யும் பொழுது வெளிப்படைத் தன்மை வேண்டும், வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அவை வாங்கப்பட வேண்டும்’ என்பது நீண்டகால விவாதப் பொருளாக இருந்தது.
    இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதுதான் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கை, 2024. இதன்படி, இனி நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் மட்டுமல்லாது, பருவ இதழ்களும் வாசகர்களின் கருத்தறிந்து நூலகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்பதாகும்.

    இதன் தொடக்கமாக, கடந்த வாரம் பொது நூலக இயக்குநர் அவர்களின் அறிவிப்பு அமைந்தது. வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பருவ இதழ்கள் பற்றிய பதிவேடு ஒன்று நூலகங்களில் உடனடியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நகர்ப்புற நூலகங்களில் இந்த பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் தங்கள் விருப்பமான  பத்திரிகைகளை எழுதி வைத்தனர்.   
 அடுத்த ஓரிரு நாட்களில், பொது நூலக இணையதளத்தில் நூலகங்களுக்கான பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்யும் portal தொடங்கப்பட்டது. இந்த போர்டலில் நூலகர்கள், வாசகர் வட்டத் தீர்மானத்தின்படி தேர்வு செய்யப்பட்ட பருவ இதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் இந்த பணி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    ‘ஏற்கனவே வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகள் பதிவேடு பராமரிக்கப்பட்டு, வாசகர்கள் பருவ இதழ்களைப் பதிவு செய்திருந்த நூலகங்களுக்கு இந்தப் பணி எளிதாக இருந்தது. மற்ற நூலகர்களுக்கு இந்தப் பணி கடினமாக இருந்தது. இரண்டு நாட்களுக்குள் வாசகர்களைத் தேடி அவர்களுக்கு இத்திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்து, அவர்கள் படிக்கும் / விரும்பும் பத்திரிகைகளை எழுதி கையொப்பம் பெறுவது என்பது பெரும்பாலான நூலகர்களுக்கு, குறிப்பாக ஊர்ப்புற நூலகர்களுக்கு  பெரும் சவாலாக இருந்தது.
    ஒரு வழியாக வாசகர் வட்டத்தில் தீர்மானம் போட்டு வாசகர்களிடம் கையொப்பம் பெற்று இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும்போது, இணையதள portal சரியாக வேலை செய்யவில்லை. இதனால்,  பல நூலகர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறினர். சென்னையில் ஒரு நூலகருக்கு உடல்நிலை சரியில்லாம் போனதாக சென்னை நூலக நண்பர் கூறினார்.  சில நாட்களில் இந்த பணியை  நூலகர்கள் அனைவரும்  செய்து முடித்துள்ளனர். மகிழ்ச்சி.

சிக்கல்களும் தீர்வுகளும்:
 இது ஒரு அருமையான திட்டம். இத்தனை ஆண்டுகளாக நூலகங்களுக்கு பருவ இதழ்கள் வாங்குவது மாவட்ட நூலக அலுவலர்கள்தான். 'பருவ இதழ்களை முடிவு செய்யும்போது நூலகர்களை கலந்தாலோசிக்க வேண்டும்' என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த போது, சங்கம் சார்பில் மாவட்ட நூலக அலுவலரிடம் கோரிக்கை வைத்தோம். "இது எங்கள் உரிமை. இதில் நீங்கள் தலையிடக்கூடாது. பணியாளர் நலன் பற்றி மட்டும் போசுங்கள்" என்று அன்றைய மாவட்ட நூலக அலுவலர் கூறிவிட்டார். மற்ற மாவட்ட நூலக அலுவலர்களின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது.
    நூலகர் குரல் என்று ஒரு பத்திரிகை நடத்தினோம். நூலகர்களுக்காக நூலகர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை. அதற்கு மாவட்ட நூலக அலுவலர்களிடம் order வாங்க நடையாக நடந்தோம். சிலர் 'இயக்குநரைப் பாருங்கள்' என்பார்கள். சிலர் 'நிதி இல்லை' என்பார்கள். அப்பாடியே order கிடைத்தாலும் குறைவான எண்ணிக்கையில் தான் கிடைக்கும். சந்தா வசூல் செய்து பத்திரிகை நடத்தினோம். தாக்கு பிடிக்க முடியவில்லை.
    ஓய்வு பெற்ற பொது நூலகத்துறை இணை இயக்குநர் திரு. ந. ஆவுடையப்பன் நூலக உலகம் என்று ஒரு பத்திரிகை நடத்தினார். நூலகத் துறை சார்ந்த செய்திகள், நூலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்று இருந்தன.  இவராலும் போதுமான பத்திரிகை ஆர்டர் பெற முடியவில்லை. பத்திரிகை நின்று விட்டது.  இப்படி துறை சார்ந்த பத்திரிகைகளையே நூலகர்களால் வாங்க முடியாமல் இருந்தது. தற்பொழுது நிலைமை மாறி விட்டது. நூலகர்கள் தாங்கள் விரும்பும் பருவ இதழ்களையும் வாங்க முடிகிறது. மகிழ்ச்சி. 
 இந்த திட்டத்தை வடிவமைத்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தந்த பொது நூலக இயக்குநர் திரு க. இளம்பகவத் அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
    இதை நூலகர்கள் சிறப்பாகச் செய்வார்கள் என்று அவர்கள் மீது இயக்குநர்  வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இதுபோன்ற இணைய வழி தொழில் நுட்ப்பங்களை துறையில் புகுத்தும் போது பணியாளர்களுக்குப் புரிதலும் பயிற்சியும் இருக்க வேண்டியது அவசியம்.
    இந்த திட்டத்தைப் பற்றிய புரிதல் பெரும்பாலான நூலகர்களுக்கு இல்லை. இந்த திட்டத்தைப் பற்றி நூலகர்கள் ஓரளவாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கடந்த இதழில் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் திட்டத்தில் நூலகர்களின் பங்கு என்னும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதி இருந்தேன்.

அடிப்படை கணினி அறிவு:  
    இணையதளத்தைக் கையாள்வது, இணைய தளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது, இணையதளங்களில் ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வது போன்ற அனுபவங்கள் நமது நூலகர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பொது நூலகத்துறை வலைத் தளத்தையோ, அண்ணா நூற்றாண்டு நூலக வலைத் தளத்தையோ எத்தனை நூலகர்கள் நோண்டிப் பார்த்திருப்பார்கள்? எல்லோரும் ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்கிறார்கள். எத்தனை பேருக்கு மின்னஞ்சல் அனுப்பத் தெரியும்? எத்தனை பேருக்கு மின்னஞ்சல் முகவரி தெரியும்? எத்தனை பேருக்கு பாஸ்வேர்டை பராமரிக்கவும், மாற்றவும், வேறொரு கணினியில் மின்னஞ்சலை அனுப்பவும் தெரியும்? இவையெல்லாம் தெரிந்த நூலகர்கள்  எத்தனை சதவீதம் என்பதை அவரவர் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.      இருந்தாலும், எப்படியோ ஒரு வழியாகக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறித்த நேரத்தில் நூலகர்கள் செய்து முடித்து விட்டார்கள். மகிழ்ச்சி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.    சரி, இவர்களில் எத்தனை பேர் சொந்தமாகக் கணினியில் பதிவேற்றம் செய்தனர்? எத்தனை நூலகர்கள் தங்கள் நூலகங்களில் பணிபுரியும் தினக்கூலி பணியாளரை வைத்து பதிவேற்றம் செய்திருப்பார்கள்? எத்தனை பேருக்கு அவர் குடும்பத்தார் செய்திருப்பார்கள்? எத்தனை நூலகர்களுக்கு கணினி மையத்தார் செய்திருப்பார்கள்? எல்லாம் அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். 
    இத்துடன் இந்த பணி முடிந்து விடுவதில்லை. இதுதான் ஆரம்பம் என்பதை நூலகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை ஆபரேஷன் சக்சஸ் என்று சொல்லலாம். இந்த வெற்றி தொடர வேண்டும். இந்த வெற்றி தொடர வேண்டும் என்றால் நூலகர்கள் குறைந்தபட்ச கணினி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    மற்றவர்களை வைத்து கணினியில் பதிவேற்றம் செய்வது தொடக்கமாகவும் அவசரத்துக்காகவும் என்று வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மற்றவர்களை நம்பி இருக்கக் கூடாது.

 கால அவகாசம்:
 இந்த ஆண்டு திட்டத்தை வடிவமைக்கவும், அதற்கான மென்பொருளை உருவாக்கவும் கால தாமதம் ஏற்பட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் பருவ இதழ் தேர்வுக்கான பணி மார்ச் முதல் வாரத்திலேயே தொடங்கி, மூன்றாவது வாரத்தில் முடிப்பதற்கான பணியை இயக்குநர் அலுவலகம் செய்யும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான் திட்டம் முழுமை அடையும்.

பத்திரிகைகளின் எண்ணிக்கை:
    அடுத்து பத்திரிகைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பொது நூலகம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவு வாசகர்களுக்கு என்று இல்லாமல் அனைத்து தரப்பு வாசகர்களுக்கான களம் என்னும் அடிப்படையில் பல்வேறு பொருள் சார்ந்த பத்திரிகைகளை வாங்க, தொகை பிரித்து ஒதுக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
 அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலில் மேலும் பல பத்திரிகைகள் சேர்க்க வேண்டும் என்று வாசகர்கள் கருத்து தெரிவித்தனர்.  அவர்கள் கேட்ட பத்திரிகைகள் பட்டியலில் இல்லை. அதனால், அடுத்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகள் பட்டியலில் மேலும் பல பத்திரிகைகள் சேர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

மென்பொருள்:    
   நூலகங்களுக்கு வாங்கப்படும் பத்திரிகைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதள மென்பொருள் தற்பொழுது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் இருந்த filter ஆப்ஷன், ஓரளவு கணினி அறிவு உள்ளவர்கள் தான் பயன்படுத்த முடியும். அடுத்து, Next Page ஆப்சன் ஓப்பன் ஆகவில்லை. மேலே உள்ள Rows option வைத்துதான் அடுத்த பக்கங்களை பார்க்க முடிந்தது. இவையெல்லாம் சரி செய்யப்பட்டு விட்டது. முதல் நாளில் இருந்த பத்திரிகை பட்டியலுக்கும் அடுத்த நாள் இருந்த பத்திரிக்கை பட்டியலுக்கும் சில வேறுபாடுகள் இருந்தன. அதனால், வாசகர் வட்ட தீர்மானத்திற்கும், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கும் சிறு வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.
    அடுத்து, மென்பொருளை Update செய்பவர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். ‘மென்பொருள் அப்டேட் செய்யப்படுகிறது அதனால் இணையதளத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை’ என்னும் தகவல் மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் தெரியப்படுத்த வில்லை. நூலகர்களைத் துரிதப்படுத்துவதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். இதனால், பல நூலகர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக என்னிடம் கூறினார்.  மென்பொருள் பயன்படுத்தும் போதுதான்,  அப்டேட் செய்ய வேண்டியதன் அவசியம் தெரியவரும். இது வழக்கமானது.
    இணைய தளத்தை பயன்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அவர்களின் உரையில், "பத்திரிகைகள் கொள்முதல் அதிகாரம் நூலகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.  ‘இந்த இயக்குநர் வந்த பிறகு அதிகாரங்கள் அனைத்தும் இயக்குநர் கைக்குப் போய் விட்டது’ என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் பார்த்தல், அதிகாரம் பரவலாக்கப் பட்டுள்ளது (delegation of power) என்று தான் தெரிகிறது. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைச் சரியாக பயன்படுத்துவோம்.

பருவ இதழ்கள் தேர்வில் நூலகர்கள் பங்கு:    
    பருவ இதழ்கள் தேர்வில் வாசகர்கள் பங்கு பாதி என்றால், மீதி நூலகர்களிடம் தான் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்ப அறிவை நூலகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.   நூலகர்கள் புத்தக காப்பாளர்கள் அல்ல. அவர்கள் master of all subject. இந்த நூலக வாசகர்களுக்கு என்ன பத்திரிகைகள் வாங்கி வைக்க வேண்டும் என்னும் தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு மாவட்ட மைய நூலகர் என்னிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு “குறிப்பிட்ட சில பத்திரிகைகள் மட்டும் வாசகர்கள்  தேர்வு செய்து கொடுக்கிறார்கள். மற்ற பத்திரிகைகளைப் பற்றிக் குறிப்பிட்டால், ‘அவை எல்லாம் வேண்டாம்’ என்று சொல்கிறார்கள். என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.  ”வந்திருக்கும் வாசகர்களில் ஒருவருக்கு ஒரு பத்திரிகை மட்டும் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.  வந்திருக்கும் 30 வாசகர்கள், இந்த ஊரில் உள்ள 30 ஆயிரம் பொது மக்களுக்கான பிரதிநிதி ஆகாது.  சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யுங்கள்” என்றேன்.

 இந்த திட்டமாகட்டும், அடுத்து வரும் திட்டங்களுக்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம். நூலகத்துறை பயிற்சி அளிக்கும் என்று நூலகர்கள்  காத்திருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்கிறோம். இதை இயக்க நமக்கு யார் பயிற்சி கொடுத்தார்கள்? ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளலாம். ஊர்ப்புற நூலகங்களைத் தவிர அனைத்து நூலகங்களுக்கும் கணினி வழங்கப்பட்டுள்ளது. பல நூலகங்களுக்கு இணையதள வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நூலகர்கள் கணினி அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி.

- சி.சரவணன், மூன்றாம் நிலை நூலகர்,
கிளை நூலகம் , கடத்தூர் , தருமபுரி மாவட்டம் , 8668192839.

Comments