சாதி வாரி கணக்கெடுப்பு – மக்களை முட்டாள் ஆக்கும் வேலையா?
பீகார் மாநிலத்தில்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டார் அந்த மாநில முதலமைச்சர்
நிதிஷ்குமார். இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தப் புள்ளி விவரங்களின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் 36.01 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.12
சதவீதமும், பட்டியல் இனத்தினர் 19.65 சதவீதமும்,
இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.52 சதவீதமும், பட்டியல்
பழங்குடியின மக்கள் 1.68 சதவீதமும் இருப்பதாகக்
கூறப்பட்டுள்ளது.
இந்த கணக்கைப் பார்த்தால்,
பழைய கணக்கின் சதவிகிதம் சில மாறி இருக்கிறது அவ்வளவுதான். இந்த சதவிகிதத்தின்
அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்
முன்னேற்றத்திற்கு பாடுபடப்போவதாக கூறுகிறார் நிதிஷ்குமார்.
பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார் ஆகியோர் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் ஆட்சி ஆதிக்கம்
செலுத்தி வருகின்றனர். இந்த 33 ஆண்டுகளில்
இந்த மக்களின் வாழ்வாதாரத்தை லாலுவும் திதிஷ்குமாரும் ஏன் மேம்படுத்த முடியவில்லை.
பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலன் என்று தங்களை அடையாளப் படுத்திகொண்டு,
அவர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் வாக்குகளைப் பெற்று பதவியில் சுகமாக இருப்பதுதான்
இவர்கள் வேலை. இப்பொழுது நிதிஷுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது.
இந்த மாநிலத்தில் உள்ள
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு லாலுவும்,
நிதிஷும் என்ன செய்தார்கள்? அவர்கள் வேலைவாய்ப்புக்கு ஏதாவது செய்தார்களா?
தமிழகத்தில் மட்டும்
லட்சக்கணக்கான பிகார் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்
கூலி வேலையாட்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்
கோடிக்கணக்கான பிகார் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்
கூலி வேலையாட்களாக வேலை செய்கிறார்கள்.
நிதிஷ்குமாரைத் தொடர்ந்து, பல மாநில
அரசியல்வாதிகளும் மக்களை முட்டாள்களாக ஆக்கும் வேலையை செய்து, பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.
அதுதான் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை என்னும் மாயை.
1931ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி
முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் 1,646 சாதிகள் இருந்ததாக
வகைப்படுத்தப்பட்டது. 1941ல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது.
1951ல் மக்கள்
தொகை கணக்கெடுப்பு நடந்தபோது, சாதி வாரியாகக் கணக்கெடுப்புத்
தேவையில்லை என டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறியது உண்மை என்றாலும்,
அந்தக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதால்,
அவர்களைக் கணக்கெடுக்கத் தேவையில்லாமல் இருந்தது; ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைக்குப் பிறகு,
பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால்,
அவர்களையும் கணக்கெடுப்பதே சரி என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
சாதிவாரி
கணக்கெடுப்பு கோரிக்கையை நீண்டகாலமாக வைத்து போராடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.
சாதிவாரி
கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி அடைய முடியும், இது நமது உரிமை என்கிறார்
கி.வீரமணி.
ஜாதி ரீதியான கணக்கெடுப்பின்
மூலமே ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
இவையெல்லாம்
அரசியல் பார்வை. இதை சமூகப் பார்வையில் பார்க்க வேண்டும்.
அரசியல்
பார்வை வேறு. சமூகப் பார்வை வேறு.
அரசியல்வாதிகள்
போடும் கணக்கு - அரசியல் பார்வை. அது ஓட்டுக் கணக்கு.
சமூக
சிந்தனையாளர்கள் சிந்திப்பது, சமூகப் பார்வை. அது சமூக முன்னேற்றப் பார்வை.
சமூகப்
பார்வையில் பார்த்தல், சாதிவாரிக்
கணக்கெடுப்பு, சமூக நீதி, இடஒதுக்கீடு என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.
இன்றைக்கு
தமிழகத்தில் 6 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 1.25 கோடி
இளைஞர்கள் வேலைவாப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்கு காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
லட்சகணக்கான இளைஞர்கள் நூலகங்களிலும், மரத்தடியிலும், ரயில் நிலையங்களிலும்,
பயிற்சி மையங்களிலும் பெரும் கனவோடு போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த
நிலையில், நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஆள்
எடுக்கும் எண்ணிக்கை வெறும் 3772. 4ஆம்
நிலை வந்தால் சுமார் 6 ஆயிரம் வரலாம்.
தமிழகத்தில்
ஓர் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்குக்கூட வேலை கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்ட நிலையில், சாதி வாரிக் கணக்கெடுத்து
என்ன பயன்? தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சாதிகள்
இருக்கின்றன. பல சாதிகளுக்கு ஒரு அரசு வேலை கூட கிடைக்கப் போவதில்லை. இதுதான் சமூக
நீதியா?
இது
ஒருபுறமிருக்க, மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி, சிறப்பு ஆசிரியர்கள், கௌருவ விரிவுரையாளர்கள் என்று அரசு அலுவலகங்களில் அத்துக்கூலியாக வேலை செய்பவர்கள் இடஒதுக்கீடு
முறையிலா நியமிக்கப் படுகின்றனர்?
அரசு
வேலைவாய்ப்புக்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு,
சமூக நீதி என்று பேசுவது எல்லாம் சாமானிய மக்களை முட்டாள்களாக ஆக்கும் வேலை.
பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பட்டியல் பழங்குடியின மக்களுக்கு சமூக
நீதி கொடுக்க வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டு
முறையில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களையாவது நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சமூக நீதி.
சாதிவாரி
கணக்கெடுப்பை பிறகு பார்ப்போம்.
-
நூலகர் சி. சரவணன்.
Comments