அதிகரித்து வரும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் - தீர்வு என்ன?

  • நூலகர் சி. சரவணன்.

அண்மைக்காலமாக ஆசிரியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் மனக்குமுறல்களை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. மருத்துவர்களைப்போல,  ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூட ஆசிரியர்கள் சிலர் பதிவு போடுகிறார்கள். அந்த பதிவுக்கு ஆசிரியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது.

 இன்றைக்கு ஆசிரியர்கள் மட்டும் இது போன்ற தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள் என்று இல்லை.  அனைத்து துறை அரசு ஊழியர்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், மற்ற துறை அரசு ஊழியர்கள் அதை  எளிதாக எதிர்கொள்கிறார்கள். 'அரசு ஊழியர் சங்கம்' ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் தாக்கப்படபோது, அரசு ஊழியர் சங்கம் பிரச்சினையை கையில் எடுத்தது. தாக்குதலில் தொடர்பு உடையவராக சொல்லப்பட்ட  அமைச்சர் ஒருவரின் பதவி பறிபோனது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்தபோது, அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. கே.ஆர். அப்பாவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பூட்டி சாவியை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார். இவையெல்லாம் ஊழியர்களை பாதுகாக்கும் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகள்.

அரசு ஊழியர் சங்கத்தைப் பார்த்து  ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியரை பெற்றோர், மாணவர் அல்லது பொதுமக்கள் தாக்கும்போது மற்ற ஆசிரியர்கள் அமைதியாக இருக்கிறார்களே தவிர, எதிர்வினை ஆற்றுவதில்லை. 

ஒரு விசாரணைக் கைதியை போலீசார் அடித்து கொன்றுவிட்டால்கூட, உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் ஆயுதப் படைக்கு பணி மாறுதல் செய்கிறார்கள். அவ்வளவுதான்.

 ஆனால், கல்வித் துறையில் அப்படி இல்லை. ஒரு ஆசிரியர் மீது ஏதேனும் புகார் வந்தால், விசாரணை செய்யும் முன்பே அந்த ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலர் சஸ்பென்ட் செய்து விடுகிறார். 

பொதுவாக, ஆசிரியர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  பல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் - என்று தங்கள் வட்டத்துக்குள் இருக்கிறார்கள்.  இவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் பள்ளி என்று பார்த்தால் மிகக் குறைவுதான்.  ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் வந்தால் மற்ற ஆசிரியர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.  அந்த புகார் முற்றிலும் பொய்யான, ஜோடிக்கப்பட்ட புகார் என்று மற்ற ஆசிரியர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை. அந்த ஆசிரியருக்கு ஆதரவாக இருப்பதுமில்லை.  'அவருக்கு வந்தது போல், நாளை நமக்கும் வராதா?' என்று சிந்திப்பதில்லை.

இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராக கொடுக்கப்படும் பாலியில் புகார்களில் 90% புகார்கள் ஜோடிக்கப்பட்ட புகார்கள் என்று விசாரணையின் முடிவில் தெரிய வருகிறது. அதற்குள் அந்த ஆசிரியர் படும் மன உளைச்சல், அவர் குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சிறிய பிரச்சினையைகூட  ஊதி பெரிதாக்கும் பத்திரிகைகளின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் எதிராகவே இருக்கிறது.

இனியாவது ஆசிரியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான சங்கங்கள் இருப்பது ஆசிரியர்களிடம்தான். இதில் தவறு இல்லை. ஆனால், ஒரு ஆசிரியருக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை என்று வந்தால், சங்கப் பாகுபாடு பார்க்காமல் ஆசிரியர்கள் ஒற்றுமையாக இருந்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதற்கு "ஆசிரியர் பாதுகாப்பு இயக்கம்" என்னும் தலைப்பில் ஒரு அமைப்பை ஆசிரியர் சங்கங்கள் உருவாக்க வேண்டும். இந்த அமைப்பிற்கு ஆசிரியர்களிடம் ஆண்டு சந்தா வாங்கி, அந்த நிதி மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தேவைப்பட்டால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் திரட்டி களத்தில் இறங்கி போராட தயாராக இருக்க வேண்டும்.

 ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் முதன்மை கல்வி அலுவலர் வரும் முன்பே இந்த அமைப்பு நிர்வாகிகள் - வேலை நாள், வேலை நேரம் என்று பார்க்காமல் அந்த பள்ளியில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொது மக்களுக்கும் பயம் வரும். ஆசிரியர்கள் எதெதெற்கோ நன்கொடை கொடுக்கிறார்கள். தங்களை பாதுகாக்கவும் அமைப்பிற்கு நிதி வழங்குவதில் சிக்கனம் காட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

ஆசிரியர் சமூகம் சிந்தித்து செயல்படும் என்று நம்புகிறேன். நன்றி.

  • நூலகர் சி சரவணன், வாட்ஸ் ஆப்: 8668192839.

Comments