நூலகர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அமேசான் கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொது நூலகங்களில் அமர்ந்தபடி படிக்க முடியும்.
டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், 10 ஆயிரம் புத்தகங்கள் கணினியில் பிடிஃஎப் வடிவில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பருவ இதழ்கள் கணினி டெஸ்க்டாப்பில் படிக்கக் கூடிய வசதியும் உருவாக்கித் தந்துள்ளனர். tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, Digital Library மூலம் அமேசான் கிண்டில் பக்கத்திற்கான வசதியைப் பெறலாம். மின்னூலாக்கத்தில் magsters என்ற வாசிப்புத் தளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் நாளேடுகள், மாத இதழ்கள் எனப் பலவற்றையும் நாம் படிக்க முடியும்.
இந்த திட்டத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 பொது நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 140 நூலகங்களில் மின்நூலக சேவை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்து வாசகர்களும் பயன்பெறும் வகையில் பொது நூலகங்களில் நவீனத் தொழில்நுட்ப வசதிகளைத் தமிழக அரசு செய்து தந்துள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ இதழ்களும், உடனுக்குடன் கிராமப்புற மாணவர்களைச் சென்றடையும் வகையில் நூலகங்களில் மின்நூலகச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய களஞ்சியம், பாடப் பொருட்கள், ஒலிப் புத்தகங்கள், குழந்தைகள் இலக்கியம், அறிவார்ந்த தேடுபொறி, திறந்த அணுகல் ஆராய்ச்சி இதழ்கள், புத்தக மதிப்புரை ஆகியவற்றையும் எளிதில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் 323 தமிழ் பருவ இதழ்களும், 23 தமிழ் நாளிதழ்களையும் வாசகர்கள் படித்துப் பயன்பெற முடியும்.
மின்நூலகத்தில் கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில், பயணம், சுற்றுலா என 40-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நூல்கள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்படும் மின்நூல்கள் பொது நூலக வாசகர்களுக்கு எளிதில் கிடைக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் 5 ஆயிரத்திற்கும் மேலான பருவ இதழ்களும், பிரபல பத்திரிகைகள் மற்றும் செய்தித் தாள்களும் கிடைக்கும். இதன் நீட்சியாகத்தான் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்கப்படும் 10 லட்சம் மின்நூல்களை வாசகர்கள் நூலகங்களில் படிக்க முடியும்.
பொதுவாக ஒரு புத்தகம் அச்சில் வந்தால் அது நூலகத்திற்கு வந்துசேரக் குறைந்தது ஒருவருடம் ஆகும். ஆனால், கிண்டிலில் அதைவிட வேகமாக வந்துவிடுகிறது. எல்லாப் புத்தகங்களையும் வாசகர்கள் வாங்கிப் படிப்பது என்பது சிரமம்.
தமிழ் நாடு அரசு பொது நூலகத் துறை நூலகங்களை நவீனமயமாக்கும் வகையில், மின் நூலகச் சேவை அறிமுகம் செய்து, இலவச Wifi இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு இதழ்களை நூலகங்களில் இலவசமாக வந்து படிக்கலாம் என்ற நிலை, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இது தமிழ்நாடு பொது நூலகத்துறையின் தொழில்நுட்பப் புரட்சி எனலாம்.
இந்தியாவில் வேறெந்த மாநிலமாவது நூலகங்களில் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறதா என்று தெரியவில்லை. அநேகமாகத் தமிழ்நாடே இதில் முன்னோடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த அருமையான திட்டத்தின் பயன்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடமையும் நூலகர்களைச் சாரும். கணினியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கையாண்டு வரும் எனக்கே இந்த திட்டத்தின் நோக்கம், இந்த திட்டத்தின் பயன்களை வாசகர்களிடையே எவ்வாறு கொண்டு சேர்ப்பது பற்றிய புரிதல் ஓரளவு மட்டுமே இருக்கிறது. அதுவும் பல தளங்களில் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டேன்.
கணினியைக் கையாள்வது தொடர்பான ஆட்டிப்படை பயிற்சிகூட நூலகர்களுக்கு இதுநாள் வரை கொடுக்கப்படவில்லை என்று பல மாவட்ட நூலகர்கள் தெரிவிக்கிறனர். நிலைமை இப்படி இருக்க, இந்த இத்திட்டத்தில் இந்த மாதம் பயனடைந்த பயனாளர்கள் எண்ணிக்கை எத்தனை என்று கேட்கப்படுகிறது. கேட்கிறார்களே என்பதற்காக ஏதோ ஒரு எண்ணிக்கையைக் கொடுத்து விடலாம். ஆனால், இந்த திட்டத்திற்காக நமது வரிப்பணம் பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, திடீரென்று உயர் அதிகாரி/ முக்கிய பிரமுகர்/ மக்கள் பிரதிநிதி யாராவது நூலகத்திற்கு வந்து இந்த திட்டத்தைப் பற்றிக் கேட்டால் நாம் இப்படி விளக்க முடியும்?
எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டத்தின் பயன்களைப் பயனாளர்களிடம் கொண்டு சேர்ப்பது கீழ்நிலை பணியாளர்கள்தான். இந்த திட்டத்தின் பயன்களைப் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்க இருக்கும் நூலகர்களுக்கு இது தொடர்பான பயிற்சியும் வழிகாட்டுதலும் கொடுப்பது அவசியம். இல்லையென்றால், இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். நூலகத்துறை நூலகர்களுக்கு போதிய பயிற்சியும் வழிகாட்டுதலும் உடனடியாக கொடுக்கும் என்று நம்புவோமாக!
நன்றி.
- சி. சரவணன், ஆசிரியர், நூலகர் செய்தி மடல்.
Comments