ஒழுங்கீனமான மாணவர்கள் - தீர்வு என்ன?

அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்கும் காட்சியையும், ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டு இருக்கும்போது மாணவர்கள் நடனமாடும் காட்சியையும் தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். 

 இது, மாநிலத்தில் ஏதோ ஒரு பள்ளியில், ஒரு சில மாணவர்களால் நடந்தவை என்று பெரும்பாலோனோர் நினைக்கின்றனர்.

 நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் நாளும் நடக்கும் காட்சிகள் இவை. ஆசிரியர்களின் இருசக்கர வாகனத்தின் டயரை ஊசியால் குத்தி பஞ்சர் செய்வதும், இருசக்கர வாகன இருக்கையை பிளேடால் கிழித்து நாசப்படுத்தும் சாதாரண நிகழ்வுகள். வகுப்பறையில் கேள்வி கேட்கும் ஆசிரியரை முறைப்பதும், தரக்குறைவாக பேசுவது சகஜம். ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது நடனமாடுவதும், பாலியல் நோக்கோடு பார்த்து சிரிப்பதும் உச்சக்கட்டம்.

மாணவர்களிடம் அடி வாங்கும் ஆசிரியர்களும் உண்டு; ஆபாச வார்த்தைகளை வாங்கும் ஆசிரியைகளும் ஒன்று. இவையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் அந்த ஆசிரியர், ஆசிரியை மனதோடு மூடி மறைத்து விடுகின்றனர்.  இவை எதுவும் பத்திரிகைகளில், காட்சி ஊடகங்களில் வெளிவருவது இல்லை. பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வரும் செய்திகள்  ஆயிரத்தில் ஒன்றுதான்.

 20 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக இருந்த மாணவச் சமூகம், எவ்வளவு சீரழிந்து வருகிறது என்பதை பார்க்கும்போது, அதே அரசுப் பள்ளிகளில் படித்த நமக்கு வேதனையாக இருக்கிறது. அவமானமாகவும் இருக்கிறது.

இது ஏதோ ஒரு சில மாணவர்கள் செய்யும் குறும்பு வேலை என்று சிலர் சொல்கிறார்கள். சில பத்திரிகைகளும் அப்படியே எழுதுகின்றன. 

"ஆசிரியர்கள் இந்த மாணவர்களை தங்கள் குழந்தைகளைப் போல் கருதி திருத்த வேண்டும்" என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. நம் வீட்டுக் குழந்தைகள் தவறு செய்தால் அடித்துதான் திருத்துகிறோம். ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்காமல் திருத்த வேண்டும் என்றால், அது சாத்தியமா? அடிப்பது போலவாவது பாவனை செய்ய வேண்டாமா? பிறகு எப்படி இவர்களை ஆசிரியர்களால் திருத்த முடியும்?

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. "மேயற மாட்டை நக்குற மாடு கெடுக்கிறது" என்று. ஒரு வகுப்பில் நன்றாகப் படிக்கும் 40 மாணவர்களை இதுபோன்ற நான்கு மாணவர்கள் கெடுத்து விடுகிறார்களே என்பது தான் ஆதங்கம்.

 இவர்களால், அர்ப்பணிப்போடு கற்பிக்கும்  ஆசிரியர்கள் தொய்வு அடைகிறார்கள். 

இந்த நிலைமை தொடர்ந்தால், "சரியான நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டும்; பாடத்தை முடிக்க வேண்டும்; தேர்வு நடத்த வேண்டும்; அரசு கேட்கும் புள்ளி விவரங்களை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும்; மாணவர்கள் படித்தால் என்ன, படிக்காமல் போனால் என்ன!" என்ற நிலைக்கு ஆசிரியர்கள் வந்து விடுவார்களோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வெளியூர்களில் கூலி வேலை செய்வதாகவும், இவர்கள் வயதான பெரியவர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வருவதாகவும், இவர்கள் குடும்பத்திற்கும் அடங்குவதில்லை, ஆசிரியர்களுக்கும் அடங்குவதில்லை என்று சொல்லப்படுகிறது.

எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் சம்பவமாக இதை நாம் கடந்து விட முடியாது. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன்மீது அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

இது போன்ற மாணவர்களுக்கு மேலோட்டமாக மன்னிப்பு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. மற்ற மாணவர்கள் பயப்பட மாட்டார்கள். இவர்களுக்கு ஏதேனும் குறைந்தபட்ச தண்டனை நிச்சயம் உண்டு என்ற ஒரு நிலைமை வந்தால்தான் இவர்கள் தங்களை திருத்திக் கொள்வார்கள்.

அதற்கு முன்பாக இதுபோன்ற ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்து, அந்த மாணவர்களின் குடும்ப சூழலை ஆய்வு செய்ய வேண்டும்.   இந்த பணியை  செய்து முடிக்க  குழு ஒன்றை அரசு நியமிக்க வேண்டும். அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு இதனை செய்து முடிக்க வேண்டும்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளார் என்று புள்ளிவிவரம் காட்டுகிறது. இது போன்ற ஒழுங்கீனமான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்று பெற்றோர்கள் முடிவு  செய்து விட்டால், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும். ஆகவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நூலகர் சி.சரவணன்.

8668192839.

Comments