போராடிப் பெற்ற சலுகைகள் காக்கப் பட வேண்டும்.
*சி.சரவணன்*
நூலகர், கடத்தூர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நூலகப் பணியாளர் கூட்டம், புதிய நூல்கள் நூலகங்களுக்கு எடுத்துச் செல்வது, எஜூசாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவது - போன்றவை வெள்ளிக்கிழமைகளில் தான் நடந்து வந்தன.
இதனை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை. அப்பொழுது இருந்த மூத்த நூலகர்களும் மௌனமாகத்தான் இருந்தனர்.
"நூலகர்களுக்கு இருப்பது ஒரு நாள் வார விடுமுறை; அந்த நாளில் இது போன்ற வேலைகள் நூலகர்ளுக்கு வைப்பதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்; அதனால், இது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமைகளில் வைக்கக்கூடாது" என்று எஜூசாட் நிகழ்ச்சியில் இயக்குனருக்கு கோரிக்கை வைத்தேன். அந்த மாதத்தோடு எஜூசாட் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
அத்துடன், நான் பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தபோது, "வெள்ளிக்கிழமைகளில் நூலகர்களுக்கு எந்தப் பணியையும் வைக்கக்கூடாது" என்று இயக்குநர் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் பணியாளர் கூட்டம் என்று அறிவித்த மாவட்ட நூலக அலுவலர்களிடம் பேசி நாள் மாற்றம் செய்தோம். இதனால், மாநில அளவில் நிலைமை மாறியது. கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமைகளில் நூலகர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர்கள் எந்த வேலையும் வைப்பதில்லை.
தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் நூலகப் பணியாளர் பயிற்சி முகாம் 6.5.2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும், போராடிப் பெற்ற சலுகைகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகவும், பயிற்சி நாளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து, பயிற்சி நாளை வேறோரு வேலை நாளுக்கு மாற்ற வேண்டும் என்று பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பெரும் முயற்சி எடுத்தனர்.
இதன் விளைவாக பயிற்சி முகாம் நடைபெறும் நாள் 7.5.2022 சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
தேதி மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுத்த மாவட்ட நூலக அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் பணிகளுக்கு இடையே பெருமுயற்சி எடுத்துக் கொண்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.
பயிற்சி நாளை வேலை நாளுக்கு மாற்ற வேண்டும் என்று நான் கருத்து தெரிவித்ததும், இதனை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான செயல் என்றும், தருமபுரி மாவட்ட நூலகர்கள் பிரச்சினைக்குரியவர்கள் என்றும் சிலர் கூறியதாக கேள்விப்பட்டேன். இதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
எங்கெல்லாம் நூலகர் நலனுக்கு பிரச்சினை வருகிறதோ, அங்கெல்லாம் குரல் கொடுப்பது எங்கள் வழக்கம்.
அதுமட்டுமல்லாது, மாவட்ட நூலக அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், அதற்கும் குரல் கொடுத்து வருகிறோம்.
நூலகர் பணிமாறுதலில் மாவட்ட நூலக அலுவலர் முறைகேடு செய்தார் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. விசாரித்ததில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரியவந்தது. அப்பொழுது மாவட்ட நூலக அலுவலருக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இதுமட்டுமல்ல, கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராக பணிபுரிந்த ஒருவர், அவர் சொல்படி தான் மாவட்ட நூலக அலுவலர் செயல்பட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். அத்துடன் மாவட்ட நூலக அலுவலர் அறையில் ஒரு காமிரா வைத்து அங்கு என்னென்ன நடக்கிறது என்று மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கண்காணித்து வந்தார். இருவரிடையே பிரச்சினை அதிகமானதால்,
மாவட்ட நூலக அலுவலரை இடமாற்றம் செய்ய இரண்டாம் நிலை நூலகர் பெரும் முயற்சி எடுத்தார். 30ஆம் தேதிக்குள் அவரை மாற்ற வில்லை என்றால் நான் புடவை கட்டி கொள்வேன் என்று சவால் விட்டார்.
மாவட்ட நூலக அலுவலரை காரணம் இல்லாமல் இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், விசாரணை அலுவலரை வைத்து மாவட்டப் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று இயக்குநர் அவர்களிடம் நான் மனு அளித்தேன். அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். மனுதாரர் என்ற வகையில் விசாரணையில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது. நானும் கரூர் சென்று என் கருத்தை பதிவு செய்தேன்.
இவ்வாறு மாவட்ட நூலக அலுவலர்களுக்கு, நூலகர்களால் பிரச்சினை என்றால், நியாயத்தின் அடிப்படையில் மாவட்ட நூலக அலுவலருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம்.
Comments