தொடர்ச்சியாக நூலகர்களின் மரணச்செய்தி - ஏன் இந்த அவல நிலை?

அண்மைக்காலமாக நூலகர்களின்  இறப்புச்செய்தி சமூக ஊடகங்களில் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

இதுவரை 12 க்கும் மேற்பட்ட நூலகர்கள் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரம் நூலகர்கள்தான் இருப்பார்கள். இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் உள்ள நூலகர்களில் ஏன் இத்தனை மரணங்கள்? ஆசிரியர்கள் இப்படி இறந்ததாகச்  செய்திகள் இல்லையே? அப்படியே ஒன்றிரண்டு செய்திகள் வந்தாலும் அது அவர்களின் மொத்த எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே. கொரோனா  வைரஸின் முதல்  பரவல் முடிந்ததாக தவறாக செய்தி பரப்பப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்களால் சொல்லப்பட்டது. அதை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.  


 மார்ச் மாதத்தில் மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல் துறை பணியாளர்கள், சுகாதார துப்புரவு பணியாளர்கள் முதலான முன் களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

 அதுமட்டுமல்லாது, தேர்தல் பணிக்குச் செல்லும் முன்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் கமிஷன் மூலமாக அறிவுறுத்தப்பட்டது.

 அந்த வகையில் பெரும்பாலான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகுதான் தேர்தல் பணிக்குச் சென்றார்கள். ஆனால்,  நூலகர்கள் அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தேர்தல் பணிக்குச் செல்வது சிக்கலானது, தொற்று பரவுவதற்கு வாய்ப்புண்டு என்று தெரிந்தும்கூட நூலகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. 

இது மட்டுமல்லாது, பல்வேறு சமூக ஊடகங்களில் தடுப்பூசிப் பற்றிய தவறான செய்திகள் சிலரால்  பரப்பப்பட்டது. அதையெல்லாம் புறந்தள்ள வேண்டிய நூலகர்கள்  அதையே ஃபார்வேர்ட் செய்து நூலகர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துகொண்டார்கள். 

தேர்தலுக்குப் பிறகு அக்கம் பக்கத்தில்  சிலர் இறந்துவிட்டதைப்  பார்த்த பயத்தில் தற்பொழுது தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

 இன்னும் பாதிக்கும் மேற்பட்ட நூலகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. 

சமூகத்திற்கு முன்னுதாரணமாக நல்ல தகவல்களை வழங்கவேண்டிய பொறுப்பில் இருக்கின்ற நூலகர்கள் இதுபோன்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மெத்தனமாக இருந்தது ஏன் என்று தெரியவில்லை. இதுதான் இந்த நூலகர்களின் இறப்புகளுக்குக் காரணம். 

 மற்றத் துறை அரசு ஊழியர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நூலகத் துறையில் அவ்வாறு எந்தச் சலுகைகளும் இல்லை. அரசு நிதியில் ஊதியம் பெறும் நூலகர்களுக்கு, அதுவும் பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உண்டு. மற்ற நூலகர்களுக்கு எந்த பாதுகாப்பும், எந்த பணப் பயனும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஊர்ப்புற நூலகர்கள் சிலர் இறந்த செய்திகளையும்,  இறந்தவர்களின் பட்டியலையும் பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. இறந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று சிலர் பதிவிடுகிறார்கள். அது இறந்தவர்களின் குடும்பத்திற்கு சிறிய ஆதரவாக மட்டுமே இருக்கும். 

1200 ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளுமாறு அரசு அறிவுருத்தியும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தவர்கள்தான் இறந்து விட்டார்கள். இவர்களுக்காகவும் சங்கங்கள் போராட வேண்டியுள்ளது.  இனியும் இதுபோன்ற இறப்புச்செய்திகள் வராமலிருக்க நூலகர்கள் உடனடியாக தங்கள் குடும்பத்தோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சங்க நிர்வாகிகள் நூலகர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவதின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும். தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியவில்லை என்று நூலகர்கள் சிலர் கூறுகின்றனர்.‌ 

நூலகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தடுப்பூசி போடும் மையங்களில் நீங்கள் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம். உங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து, 'அலுவலகத்துக்கு போக வேண்டும், சீக்கிரம் ஊசி போடுங்கள்' என்று கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் சமூகத் தொற்றாகிவிட்டது. வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே.


 நன்றி, 

சி. சரவணன் .

Comments

சிறப்பான அறிவுறுத்தல்