மாணவிகளுக்கு நடைபெறும் திருமணங்கள் - அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட காலமாக 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  இந்த கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதில்லை. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கொன்றும், இங்கொன்றும் எனத் திருமணங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் 7 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல மாணவிகளுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

18 வயது நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அனைவரும் அறிவர். அப்படி இருந்தும் கிராமங்களில் சிறுமிகளுக்குத் திருமணங்கள் நடந்து வருவது தொடர்கிறது. இதுபோன்ற திருமணங்கள் மண்டபங்களிலோ, வீடுகளிலோ நடைபெறுவதில்லை. பெரும்பாலும் கோவில்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடைபெறுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கும், பூசாரிக்கும் இளம் வயது திருமணம்  தவறு என்று தெரிந்தும், கோவில்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமண வீட்டார் கொடுக்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்குக் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

     வளர் இளம் பெண்களை கண்காணித்து, அவர்களுக்குக் கால முறைப்படி ஊட்டச்சத்து மாத்திரைகளை அளித்து வரும் அங்கன்வாடி பணியாளர்களும் இதுபோன்ற குழந்தை திருமணங்களைத்  தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.  பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குத்  திருமண ஏற்பாடு நடப்பது தலைமை ஆசிரியருக்குத் தெரிய வந்தாலும், அவர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் முதலான அரசாங்கத்தின் கீழ் நிலை அலுவலர்கள் குழந்தை திருமணங்களைக் கண்டு கொள்ளவில்லை. கிராமங்களில் நடைபெறும் சம்பவங்களை அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் இவர்கள் தங்கள் உயரதிகாரிகளுக்கு எந்த புகாரும் தெரிவிப்பதில்லை. 'நமக்கு எதற்கு வம்பு' என்று இவர்கள் கண்டும் காணாமலும் இருந்து விடுகிறார்கள். அப்படியே புகார் செய்து திருமணத்தை நிறுத்தி விட்டால், திருமண வீட்டார்  'நமக்கு ஏதாவது தொந்தரவு செய்வார்கள்' என்று நினைத்து இந்த அரசு ஊழியர்கள் மௌனமாக இருந்து விடுகிறார்கள்.

குழந்தைத் திருமணங்களால் ஏற்படுகின்ற சமூகச் சிக்கல்களைப் பற்றி பொது மக்கள் யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. 15, 16 வயதில் திருமணம் முடிந்து, 18 வயதில் கைக்குழந்தையுடன் அச்சகத்துக்குச் சென்று, நான்கைந்து திருமண அழைப்பிதழ் அடிப்பார்கள்.  அந்த அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு, திருமண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம் என்று கைக்குழந்தையுடன் செல்வார்கள். குழந்தை யாருடையது என்று கேட்டால் வெட்கம் இல்லாமல் 'என்னுடையதுதான்' என்பார்கள். இருந்தாலும், இவர்கள் விண்ணப்பங்கள் எதுவும் நிராகரிக்கப்படாது. உரியத் தொகையைப் பெற்றுக் கொண்டு, எல்லாம் சரியாக இருப்பதாக அனைத்து அலுவலர்களும் சான்றொப்பம் இடுவார்கள்.  அமைச்சர் முன்னிலையில் தாலிக்குத் தங்கம் வாங்கக் கைக்குழந்தையுடன் விழாவுக்குச் செல்வதும் உண்டு.

     இதைப்பற்றி யாரிடமாவது நாம் பேசினால், "பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை, நமக்கு எதற்கு?" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். சமூக அக்கறை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டாமா?

இது போன்ற திருமணங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 15, 16 வயதில் திருமணம் செய்து கொண்டு, 17, 18 வயதில் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு இவர்கள் வருகிறார்கள். உடல் வளர்ச்சியின்மை, எடைக்குறைவு, ஊட்டச்சத்து பற்றாக்குறை, கர்ப்பகால புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் பிரசவத்தில் சில பெண்கள் இறப்பதுண்டு.  மருத்துவர்கள் சரியாகப் பிரசவம் பார்க்கவில்லை என்று மருத்துவர்களை தாக்குவதும், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்க்கிறோம்.  இறந்த பெண்ணிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சாலைமறியல் செய்வதும் உண்டு. புற்றீசல் போல் பெருகி விட்ட செய்தி தொலைக்காட்சிகள் இந்த அவல செய்தியைப் பெரிதாகவும், தலைப்பு செய்தியாகவும் ஒளிபரப்பிச் செய்வதை நாம் பார்க்கிறோம்.

கிராமங்களில்  கூலி வேலைக்குச் சென்று பொருளீட்டும் இளைஞர்களுக்கு இது போன்ற பள்ளி மாணவிகளைப் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். இன்றுள்ள  இளைஞர்களில் பெரும்பாலோர் மது அருந்துகின்றனர்.  25, 30 வயதுக்குள் மதுவுக்கு அடிமையாகி, உடல் நலிவுற்று, வேலைக்குச் செல்ல முடியாமல், பொருளீட்ட முடியாமல் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களோடு இந்த பெண்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும்? இவனைத் திருமணம் செய்ததை விட, அவனை திருமணம் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வேறொருவனோடு ஓடிப் போகும் சம்பவங்களையும் நாம் பார்க்கிறோம்.

பல இளைஞர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் மரணம் அடைவதையும், போதையில் நடைபெற்ற தகராறுகளில் இறப்பதும், மது போதையில் அடிமையாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டு 25, 30 வயதுக்குள் இறப்பதையும் நாம் பார்க்கிறோம்.  இந்த இளம் விதவைகளின் நிலை என்ன?

இவ்வாறாக, சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குக்  காரணமாக குழந்தை திருமணங்கள் அமைகின்றன.

 இது போன்ற குழந்தை திருமணங்களைத் தடுக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவிப்போடு இருந்து விடலாம், விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

     திருமண உதவி திட்டத்திற்குப் பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக விசாரணை செய்து, இளம் வயதில் திருமணம் செய்தவர் என்று தெரிந்தால் அந்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும்.

     18 வயது நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மற்றும் உடந்தையாக இருப்போர் மீது வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மற்றவருக்கும் பயம் வரும். தண்டனைக்கு மட்டுமே நம் மக்கள் பயப்படுவதால் சட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

Comments