ஒரு சாமானிய மனிதனின் கேள்வி.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய்த் தொற்று காரணமாக வெளிநாடுகளில் அதிக அளவில் மக்கள் உயிரிழந்தார்கள் என்றார்கள். 

 தற்போது நம் நாட்டிலேயே தினமும் ஆயிரக்கணக்கானோர் இறந்துகொண்டு இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இறந்த மக்களைப் புதைப்பதற்கு இடமில்லாததாலும்,  எரிப்பதற்கு வசதி இல்லாததாலும்  இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

மருத்துவமனையில் இடம் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்னும் செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன.

 என் நட்பு வட்டாரங்களில் சிலரை நான் இழந்துவிட்டேன். உறவினர்கள் சிலரையும் இழந்துவிட்டேன். அவர்களை அடக்கம் செய்தது எல்லாம் பொக்லைன் எந்திரங்கள் தான்.  அந்த துக்க நிகழ்வுகளுக்குக் கூட செல்ல முடியாத நிலை இன்று உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

 இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்றும், நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இதை எல்லாம் பார்க்கும் போது நம்மால்  அச்சப்படாமல்  இருக்க முடியவில்லை.

வைரஸ் நோய் தொற்றுக்கு அறிகுறி,  காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி, பசியின்மை, மூச்சு விடுவதில் சிரமம் என்றெல்லாம் பட்டியலிட்டு சொல்கிறார்கள். 

  வெளியில் சென்றால் முகக்கவசம் போட்டுச் செல்லுங்கள் என்கிறார்கள். அதுவும் இரண்டு முகக்கவசம் போடுவது பாதுகாப்பு என்கிறார்கள். ஒரு முகக் கவசம் போட்டுச் சென்றாலே மூச்சு இழுப்பது சிரமமாக இருக்கிறது.  இரண்டு முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியில் செல்வது எப்படி என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் முகக்கவசம் அணிந்து வெளியில் சென்று வந்தாலே மூச்சடைப்பு ஏற்படுகிறது. இந்த மூச்சடைப்பை பார்த்தால் ஏதோ ஒரு பயம் ஏற்படுகிறது. மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் எப்படித்தான் இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொண்டு வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 

முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருங்கள் என்று கூறுகிறார்கள். எந்த நேரமும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் வலி ஏற்படுகிறது. உடல் வலி ஏற்படும் போதெல்லாம் ஏதோ ஓர் அச்சம் ஏற்படுகிறது. உணவில் சற்று காரம் அதிகமாக இருந்தால் கொஞ்சம் இருமலும், அதைத்தொடர்ந்து கொஞ்சம்  சளியும் வருகிறது. அதைத் துப்பும் போது நம் அச்சம் மேலும் அதிகரிக்கிறது. எந்த வேலையும் இல்லாமல் சோம்பேறியாக வீட்டில் இருப்பதால் பசியும் எடுப்பதில்லை.  அதுவும் நம்முடைய அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. எத்தனை நாட்கள்தான் இப்படி ஒரு சாமானிய மனிதன் மன உளைச்சலில் முடங்கிக் கிடக்க முடியும்?

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள யார்யாரோ, ஏதேதோ ஆலோசனைகள் கூறுகிறார்கள்.  ஆளுக்கொரு வைத்தியம் சொல்கிறார்கள். அதைக் குடியுங்கள், இதைக் குடியுங்கள் என்கிறார்கள். போதாக்குறைக்கு ஆவி பிடியுங்கள் என்கிறார்கள். எல்லாம் படிப்பதற்கும் கேட்பதற்கும் ஆறுதலாகத்தான் இருக்கின்றன. ஆனால் முடியவில்லையே!

 கைபேசியில் வரும் செய்திகளை எல்லாம் பார்த்து, வீட்டில் இருப்போர் ஏதேதோ போட்டு ஆவி பிடிக்கிறார்கள். என்னையும் ஆவிபிடிக்கச் சொல்கிறார்கள். 'எனக்கு வேண்டாம்' என்றாலும் விடுவதில்லை.

 போர்வை போட்டு மூடி விடுகிறார்கள். அரை நிமிடம் கூட என்னால் இருக்க முடியவில்லை. ஆனால், குறைந்தது இரண்டு நிமிடமாவது இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். நள்ளிரவில் சுடுகாட்டிற்குச் சென்று ஆவியை பிடித்து வரச் சொன்னால் கூட தைரியமாக சென்று விடுவேன். ஆனால், இந்த போர்வைக்குள் முகத்தை மூடிக்கொண்டு அரை நிமிடத்திற்கு மேல் என்னால் இருக்க முடியவில்லையே.

தற்பொழுது மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துகின்றன. ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யப்படுகின்றன. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டு இருக்கின்றன.  இவை நமக்கு ஓரளவுக்கு திருப்தியும், மனநிறைவும் அளிக்கிறது. இவையெல்லாம் நோய்த் தொற்று வந்தவர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகள். ஆனால், நோய்த் தொற்று வராமல் இருக்கவும், மக்கள் முன்பைப் போல வெளியில் சென்று அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும் என்ன வழி? 

தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே வைரஸில் இருந்து மக்களைக் காக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

 தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவமனைக்குச்  சென்றால் மருந்து இல்லை என்கிறார்கள். எப்பொழுது வரும் என்று கேட்டால், "தெரியாது" என்கிறார்கள்.  

 "எண்பது நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?" என்றார்  என்னைப் போல் தடுப்பூசி போட்டுக் கொள்ள தினமும் நடையாய் நடந்த ஒருவர். "

ஆமாம்" என்றேன்.

"நாங்கள் ஓட்டு போட்டோமா? 80 நாட்டு மக்கள் ஓட்டு போட்டார்களா?" என்று ஆதங்கப்பட்டார் அவர். 

"இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது" என்றேன்.

 இன்று மாநிலங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. 

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் 18 வயது நிரம்பிய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்று இன்றைய (27.5.2021) தினமணி நாளிதழில் வெளியான தலையங்கம் கூறுகிறது.

  மாநில அரசு நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு போட இருப்பதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்பனை செய்ய முடியாது என்று கூறிவிட்டன. இந்த நம்பிக்கையும் தகர்த்து விட்டது.

 எங்களுக்கு எப்பொழுது தான் தடுப்பூசி கிடைக்கும்? பள்ளிக்குச் செல்லாமல் ஓராண்டுக்கும் மேலாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் எங்கள் குழந்தைகளுக்கு எப்பொழுது தான் தடுப்பூசி கிடைக்கும்? 

  ஒன்றிய அரசு, மாநில அரசுகளுடன் கலந்து பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சாமானிய மக்கள் எதிர்பார்க்கிறோம்.



Comments

Thangamani said…
சிறப்பான கட்டுரை.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடனே மத்திய அரசு தடுப்பூசி போடுவதை தேசிய செயல் திட்டமாக எடுத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அப்போது அதற்கான செலவு பெருந்தொகை என்று பின் வாங்கியதன் விளைவு அதைவிட பல மடங்கு செலவு செய்து ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஆகிறது. பல நாடுகளில் இருந்தும் யாசகம் வேறு பெறுகிறோம்.

தடுப்பு ஊசியை தவிர்த்துவிட்டு ஆக்சிஜன் சிலிண்டரை தேடி திரிவது தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதை தான்.

இது ஒருபுறம் இருக்க இன்னமும் தடுப்பூசி போட்டால் அதாகிவிடும் இதாகிவிடும் என்று வாய் சவடால் பேசித்திரியும் கூட்டத்தைக் கண்டால் எரிச்சல் தான் வருகிறது.
இவர்கள் அனைவரும் தடுப்பூசி வேண்டும் என்று மருத்துவமனையில் திரண்டு இருந்தால் பெரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஆகி அரசாங்கத்திற்கு நெருக்கடியாக முடிந்திருக்கும். அவர்களும் வழிக்கு வந்திருப்பார்கள்.

இங்கே மக்கள் எவ்வழியோ அரசரும் அவ்வழி..