பத்ம சேஷாத்ரி பள்ளி சம்பவம் - ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஒருவர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அந்தச் செய்தியை ஏன் இவ்வளவு பெரிய தலைப்புச் செய்தியாக செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன?  தொலைக்காட்சிகளில் முதன்மைச் செய்தியாக தொடர்ந்து சில நாட்களாக வாசிக்கப்படுவது ஏன்?  

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இந்த புகார்கள் உண்மையானவையா? என்று விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 அதே வேளையில், புகார் கொடுக்கப்பட்டது என்பதற்காகவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஒரு குற்றவாளியாக சித்தரித்து 'அவன், இவன்' என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. 

சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் இது போன்ற பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன.  இந்த ஊடகங்கள் அந்தச் செய்திகளை இது போன்று முதன்மைச் செய்தியாக வெளியிடாதது ஏன்?

ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? ஊடகத்தார் இந்த அளவுக்கு  உயர்ந்த நிலையில் இருக்கக் காரணம் ஆசிரியர்கள் தானே?

 இது போன்று வந்த பாலியல் புகார்கள் பலவும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பழிவாங்கும் நோக்குடன்  சித்தரிக்கப்பட்ட புகார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளன என்பதை மறந்து விடக்கூடாது. 

  இப்பொழுது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அதுவும் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இணையவழி வகுப்பில் ஆசிரியர் அத்து மீறி செயல்பட்டதாக வந்த புகார் மீது உரிய விசாரணை செய்து அவருக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும். விசாரணையில் யாரும் தலையிடவில்லை.  சட்டம் தன் கடமையை செய்யட்டும். 'அவர் தமிழர்', 'அவர் எங்கள் ஜாதிக்காரர்' - 'அவருக்கு தண்டனை அளிக்க கூடாது' என்று யாரும் கேட்கப் போவதில்லை. 

இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரையும் ஒரு குற்றவாளியாக சித்தரித்து, அவர் முகத்தை மூடிக்கொண்டு செல்வது போல செய்திகள் வெளியிடுவதை எப்படி நடுநிலையோடு பார்க்க முடியும்? இது போன்ற புகார்களுக்கு தலைமை ஆசிரியர் உடந்தையாக இருக்க முடியுமா? 

 ஏதோ ஒரு ஆசிரியர் செய்ததாகச் சொல்லப்படும் தவறுக்கு தலைமையாசிரியரை குற்றவாளியாக பார்க்கக் கூடாது.  ஒவ்வொரு ஆசிரியரின் அந்தரங்க நிகழ்வுகளை எல்லாம் தலைமையாசிரியர் கண்காணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் பெரிய பள்ளிகளில், அதிக எண்ணிக்கையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பற்றி முழுவதும் தலைமையாசிரியர் கவனிக்க முடியாது.  ஏனென்றால், தலைமையாசிரியருக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எல்லா ஆசிரியர்களையும் சந்தேகக்  கண்ணோட்டத்தோடு அணுகவும் முடியாது.  நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வகுப்புகள் ஒதுக்குகிறார்கள்.

 இந்த வழக்கில் தலைமை ஆசிரியரையும்  காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது என்ற செய்தியை பெரிது படுத்துகிறார்கள் ஊடகத்தினர். இது வழக்கமான நடைமுறை தான். 

"இது போன்ற புகார்கள் ஏதேனும் இதற்கு முன்பு வந்தனவா? அதன் மீது ஏதேனும் விசாரணை நடைபெற்றதா? ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படதா?" என்றுதான் தலைமையாசிரியரிடம் காவல்துறை கேட்கமுடியும்.  "ஆசிரியருக்கு நீங்கள் உடந்தையாக இருந்தீர்களா?" என்று கேட்கவும் முடியாது. அப்படி கேட்கப் பட்டால் அது அபத்தமான கேள்வி.

 இது போன்ற புகார்களில் எந்த ஒரு தலைமையாசிரியரும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு சாதகமாக செயல்பட மாட்டார்கள். தலைமை ஆசிரியர்கள் குழந்தைகளின் நலனைத்தான் பார்ப்பார்களே தவிர,  குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்குச்  சாதகமாக ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்.  இது தனியார் பள்ளிக்கு மட்டுமல்ல, அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

 அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற புகார்கள் அவ்வப்போது வருவதை நாம் பார்க்கிறோம்.  புகார்களின் பின்னணியில் அந்தந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலும், கூட்டுச்சதியும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ள சம்பவங்களும் உண்டே!

வேலை வெட்டி இல்லாத பெற்றோர்களும்,  சமூக விரோதிகளும் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்குப்  பின்னாலிருந்து செயல்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

 அந்த வகையில் இந்தப் பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி முதலில் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரில் ஆதாரம் இருப்பதாக தெரிந்தாலோ, துறை ரீதியான விசாரணையில் நம்பிக்கையில்லை என்று புகார் கொடுத்தவர் காவல்துறையை நாடினாலோ மட்டுமே காவல் துறை விசாரணை நடத்த வேண்டும். துறை ரீதியான விசாரணை நடத்தும் முன்பே ஆசிரியரை கைது செய்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். 

எவ்வளவோ நல்ல  செய்திகளை நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்புள்ள ஊடகங்கள், இது போன்ற அருவருப்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இனியாவது தவிர்க்க வேண்டும்.

- நூலகர் சி.சரவணன்.



Comments