மாவட்ட நூலக அலுவலர்களுக்கு துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர் என்று பதவி உயர்வு அளிக்கப்படாதது ஏன்?
இன்று (6.3.2020) LIBRARIANS (TN) என்னும் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு ஒன்றைப் படித்தேன். பதிவு அருமை. ஆனால், பதிவிட்டவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. Forwarded news ஆக இருக்கிறது. இது போன்ற துறை சார்ந்த விழிப்புணர்வு கொடுக்கும் பதிவுகளுக்கு பதிவிடுபவர் பெயர் இறுதியில் குறிப்பிடுவது நல்லது.
சரி.
பதிவைப் பற்றிய என்னுடைய கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
பொது நூலகத் துறையில் காலியாக உள்ள இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் போன்ற உயர் பதவிகள் பல ஆண்டுகளாகக் காலியாக இருப்பதாகவும், தகுதியுடைய மாவட்ட நூலக அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் மேற்படி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்தப் பதிவில் எழுதியுள்ளார். மேற்காணும் பணியிடங்களில் நியமிக்க தகுதியுடைய மாவட்ட நூலக அலுவலர் எவரும் இல்லை என்பது பொறுப்பு இயக்குநரின் கருத்தாக இருக்கிறது என்றும், இது தவறு என்றும் இந்த பதிவை பதிவிட்டவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், தகுதியான நபர் ஒருவரும் நூலகத் துறையில் இல்லை என்று சொல்லப்படுகிறதே அதுதான் உண்மை. இதைச் சொன்னால் நூலகர்கள் சொல்பவர்மீது கோபப்படுவார்கள்.
உண்மை நிலை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பொது நூலகத் துறையும் ஓர் அங்கமே. பொது நூலகத்துறைக்கு என்று தனியாக துறை இல்லை. இயக்ககம் மட்டும்தான் உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப் படுகின்றனர். அவர்கள்தான் பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராகவும், துணை இயக்குநராகவும், இயக்குநராகவும் பதவி உயர்வு பெற முடியும். ஆசிரியராக இருந்தவர் தலைமை ஆசிரியராகவும், மாவட்ட கல்வி அலுவலராகவும் மட்டுமே பதவு உயர்வு பெற முடியும். இவர்கள் துணை இயக்குநராகவும், இணை இயக்குநாராகவும், இயக்குநராகவும் ஒருபோதும் பதவி உயர்வு பெற இயலாது.
அதேபோலத்தான், பொது நூலகத்துறையிலும் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் போட்டித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இயக்குநராகவும், துணை இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பதவி உயர்வு பெற முடியும்.
ஆனால், நூலகத் துறையில் அப்படி ஒரு போட்டித் தேர்வு மூலம் இன்று வரை ஒருவரும் பணியமர்த்தப்படவில்லை. அண்மையில் சில மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்தத் தேர்வு நடவடிக்கையைச் சில நூலகர்கள் வழக்கு தொடுத்து நிறுத்தி விட்டனர். இதனால், விகிதாசார முறைப்படி மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் பதவு உயர்வு மூலம் நிரப்பும் நடைமுறையும் தடைபட்டு விட்டது.
தற்பொழுது பொது நூலகத் துறையில் பணிபுரியும் அனைத்து நூலகர்களும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அல்லது கருணை அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் பணி பெற்று பணிபுரிந்து வருகின்றனர். போட்டித் தேர்வு மூலம், இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவரும் நியமிக்கப்படாத நிலையில், இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு மாவட்ட நூலக அலுவலர்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க வாய்ப்பில்லை. இதுதான் இன்றைய நூலகத் துறையில் உள்ள தேக்க நிலை.
ஆனால், சிலர் மிகுந்த ஆசையோடு எப்படியாவது துணை இயக்குநராகவோ, இணை இயக்குநராகவோ, இயக்குநராகவோ ஒருநாளாவது அமர்ந்துவிட வேண்டும் என்று நூலகர்களை தவறான வகையில் திசைதிருப்பி, பொறுப்பு இயக்குநருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
சட்டத்தின் நடைமுறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நீதிபதி சந்துரு அவர்களின் தீர்ப்பை நாம் சட்டத்தின் தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நடைமுறை சிக்கல் அவருக்கு தெரியாது. சந்துரு தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அல்லது சட்டத்தை திருத்தியிருக்க வேண்டும்.
இந்த இரண்டில் ஒன்றையும் தமிழக அரசு சொய்யாததால் இந்த நிலை தொடர்கிறது.
பொது நூலகத் துறையில் ஊர்ப்புற நூலகர்களாகவோ, மூன்றாம் நிலை நூலகராகவோ, இரண்டாம் நிலை நூலகர்களாகவோ இருப்பவர்கள் எம்பில், பிஎச்டி படித்து விட்டோம் என்பதற்காக இணை இயக்குநர், துணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்வுக்கு ஆசைப்படுவது ஏற்புடையது அன்று.
நம் துறையில் பலரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்து 35 வயதில் வேலையில் சேர்ந்துள்ளனர். சிலர் கருணை அடிப்படையில் 20 வயதுக்கு முன்னதாகவே பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் தற்பொழுது சீனியாரிட்டி பட்டியலில் முன்னதாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருணை அடிப்படையிலான பணி நியமனம் "உரிமை அல்ல, அது நலிவுற்ற அரசு ஊழியர் குடும்பத்திற்கு அரசு வழங்கும் சலுகை" என்று பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் தெளிவுபடுத்தி உள்ளன. அதனால், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றங்களை நாடினால், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேபோல, ஒரு பதவி உயர்வு பட்டியலில் கருணை அடிப்படையில் இருப்பவர் முன்னதாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் பின்னதாகவும் இருந்தால், இடஒதுக்கீடு இல்லாமல் நியமிக்கப்பட்டவரால் தன்னுடைய பதவி உயர்வு பாதிக்கிறது 'இது சமூக நீதி ஆகாது' என்று இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடினால், அவருக்குச் சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது.
ஆகவே, போட்டித் தேர்வு மூலம், இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்ட நூலகர்கள் மட்டுமே இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கோர முடியும். இதுதான் இன்றைய நிலை.
அதே நேரத்தில், திறந்தவெளி மூலம் (open market) இயக்குநர், மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றால், அதில் பொது நூலகத் துறையில் பணிபுரியும் நூலகர்களும் கலந்துகொண்டு நியமனம் பெற முயற்சிக்கலாம். இதுதான் இன்றைய நிலை.
நன்றி.
Comments