சாரு நிவேதிதா அவர்களின் வேற்றுலக வாசியின் டைரிக் குறிப்புகள் நூல் பற்றி...


சாரு நிவேதிதா ஐயா அவர்களுக்கு, வணக்கம்.
 தங்களின் வேற்றுலகவாசியின் டைரிக்குறிப்புகள் என்னும் நூலைப் படித்தேன். அருமை. மிக்க மகிழ்ச்சி. 
இந்த நூலின் வாசகன் என்ற வகையில் சில கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்கவும், சில கேள்விகளை எழுப்பவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த  கட்டுரைகளில் பலவற்றை அப்பொழுதே படித்திருக்கிறேன். அப்பொழுது படிக்க வாய்ப்பு கிடைக்காத சில கட்டுரைகள் தற்பொழுது படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
 இந்த நூலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள 26 கட்டுரைகளில் பெரும்பாலானவை என் நெஞ்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பல்வேறு  எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் தாங்கள் பதிவு செய்துள்ளவை பற்றி என் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.
 பல கட்டுரைகளில் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அவருடைய வாழ்க்கை நெறிகளையும் அனுபவங்களையும் சிறப்பாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
 தங்களுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிய இரண்டு புத்தகங்களில் ஒன்று மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளிக்கிறது. ஏனென்றால், என்னுடைய வாழ்க்கை அனுபவமும் அதுவே. சத்திய சோதனை நூலை ஒரு முறைக்குப் பல முறை படித்த பிறகு, என்னுடைய வாழ்க்கைப் போக்கும், எண்ண ஓட்டங்களும் மாறியுள்ளது.
 'உண்மை தரும் விடுதலை' என்னும் கட்டுரையில் தாங்கள் இவ்வாறு எழுதியிருக்கிறீர்கள், "மகாத்மா காந்தி பற்றி மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? பலரிடமும் இந்த கேள்வியை கேட்டேன். பல்லி, கௌரி சொல்வது போல் சப்தம் எழுப்புகிறார்கள். காந்தி என்றால் அவ்வளவு எகத்தாளம்?  சிலரோ அதற்கும் மேலே. கோட்சே செய்தது சரிதான் என்கிறார்கள். காந்தியால் தான் இந்தியா உடைந்ததாம். வரலாறு தெரியாதவர்கள் வேறு எப்படி பேசுவார்கள்? 'தேசத்தை துண்டாடுவது என்றால் சுதந்திரமே வேண்டாம்' என்று சொன்னவர் காந்தி. காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார் என்பது அல்ல காந்தியின் அடையாளமும், பெருமையும். வரலாற்றில் சதுரங்கத்தில் நகர்த்தப்பட்ட காய்களில் காந்தியும் ஒருவர். காந்தி இல்லாதிருந்தால் இந்தியாவின் சுதந்திரம் இன்னும் 10 ஆண்டுகள் தள்ளிப் போய் இருக்கலாம். எனவே, காந்தியின் பெருமையும், அருமையும் அவர் சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது அல்ல. வேறு என்ன? புத்தனுக்கும், இயேசுவுக்கும் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து அவர்கள் இருவரையும் நம் கண் முன்னே வாழ்ந்து காட்டியவர் காந்தி. அகிம்சையையும், சத்தியத்தையும் அவர் போதிக்கவில்லை. வாழ்ந்து காட்டினார். அரசியல் வாழ்க்கையில் மனித குலத்துக்கு அவர் அளித்த மகத்தான கொடை இதுதான். "உனக்கு தீமை செய்தவனுக்கு நீ கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை அவனை மன்னித்துவிடு" என்றார் காந்தி. அதை வாழ்ந்தும் காட்டினார். அதற்காகவே தன் உயிரையும் கொடுத்தார்". இவ்வாறு தாங்கள் காந்தியைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
 காந்தியைப் பற்றி யார் யாரோ, எதை எதையோ விமர்சனம் செய்து எழுதியதையும், மேடையில் பேசியதையும் கேட்டிருக்கிறேன். அவர்கள் அனைவருக்குமான விடை சத்திய சோதனையில் இருக்கிறது. அவர்களில் ஒருவரும் சத்திய சோதனை நூலையோ, அவர் வாழ்க்கை வரலாற்றையோ படித்து இருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கின்றேன். இங்கே ஒரு அதிர்ச்சியான உண்மையை கூறுகிறேன். நான் பொது நூலகத் துறையில் நூலகராக 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. இவற்றில் 50 நூலகங்களில் கூட 'சத்திய சோதனை' நூல் இல்லை. நான் கூறுவது உண்மையா? மிகைப்படுத்தப்பட்டதா? என்பதை நூலகர்களிடம் தாங்கள் விசாரித்தால் உண்மை நிலையை தெரியும்.  இந்த நிலை ஏன் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
 அடுத்து, 1969ஆம் ஆண்டு காந்தி நூற்றாண்டின் போது நா. சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய 'மண்ணில் தெரியுது வானம்' என்ற நூலைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதில், "அந்த நாவலைப் படிக்கும் ஒருவர் அகிம்சையையும், சத்தியத்தையும் தன் வாழ்க்கை நெறியாக கொள்வார்கள் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. நூலின் நாயகன் காந்தி. அந்த நூலை ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளுக்கு படித்து காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" இவ்வாறு தாங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
 உடனே அந்த நூலை மின்னூலாக பெற்று படித்து பார்த்தேன். அருமை, அருமை. 50 ஆண்டுகளாக என் கண்ணில் படாத, இவ்வாறு   அறிமுகப்படுத்தப்படாத நூலை படித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
 அடுத்து,  சமஸ்கிருதம் பற்றிய தங்களின் பார்வை அருமை. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பல ஆயிரம் ஆண்டு தொடர்பு இருந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஆகச் சிறந்த தமிழ் அறிஞர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை நன்கு பயின்றவர்களே. "ஆனால், இன்றைக்கு சமஸ்கிருதத்தைப் பற்றி தூற்றுவது தான் தமிழ் மொழி மீது நம் மக்கள் கொள்ளும் பற்றான அடையாளமாக நினைக்கிறார்கள்" என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.  இது முற்றிலும் உண்மையே. என் ஆதங்கமும் இதுவே.
 "1360 முதல் 1660 வரை ஐரோப்பிய கண்டத்தில் பிளேக் நோய் பரவி அவ்வப்போது தாக்கிக் கொண்டே இருந்தது. அந்த மக்கள் தொகையில் பாதிப்பேர் அந்த நோயினால் மாண்டனர்" என்ற செய்தியை எழுதியுள்ளீர்கள். அந்த செய்தியை இன்றைய நாளில் படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை காலங்கள் ஆகியும் கொள்ளை நோய்களுக்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப் படாதது இந்த அறிவு உலகத்தில் ஒரு ஆச்சரியக்குறி.
 அடுத்து, 'சர்வர் டவுன்' என்னும் கட்டுரை. இன்றைக்கும் இது பொருந்தும் கட்டுரை. பெரும்பாலான அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை இருந்தாலும், அவர்கள் மக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களுடைய வாயிலிருந்து வரும் சொல் 'சர்வர் டவுன்' என்பதாகும். இது உண்மையிலேயே 'சர்வர் டவுனா? அல்லது அதிகாரியின் மனதில் டவுனா?' என்ற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது. ரேசன் கடைகளிலும், வங்கிகளிலும் 'சர்வர் டவுனால்' மக்கள் கூட்டமாக நிற்பதை அடிக்கடி பார்கிறேன். தங்களுடைய பென்சன் அனுபவம் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கும் உண்டு.
அடுத்து,  'எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என்னும் கட்டுரை. இது எதார்த்தமான கட்டுரை. அனைவர் வாழ்க்கையிலும் அவ்வப்போது வரும் அற்புத சொல்லாக இருப்பது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என்பதாகும்.
 தாங்கள் சொல்வதைப் போல்  'எனக்கு மட்டும் ஏன் இப்படி மகிழ்ச்சி வர வேண்டும்?' என்று யாரும் கேட்பதில்லை. ஆனால், கஷ்டம் வரும்போது மட்டுமே, "கடவுள் ஏன் எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்தை கொடுக்கிறார்? என்று புலம்புகிறார்கள்.  கட்டுரை அருமை, மகிழ்ச்சி.
 மதுவால் கீழ்த்தட்டு பெண்கள் மட்டுமல்லாது, மேல்தட்டுப் பெண்களும் சிரமங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்டு எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள். அதுமட்டுமல்லாது காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அலுவலர்களுக்கும் அப்படிப்பட்ட அவமானங்களும் துன்பங்களும் நிகழ்கின்றன என்பதையும் பதிவு செய்து இருக்கிறீர்கள். அத்தனை கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு பெண்கள் கணவனோடு வாழ்ந்து கொண்டிருப்பதற்கான ஒற்றைக் காரணம் 'கணவன் இல்லாத வீட்டின் முன்பு ஆண்கள் வரிசையாக நிற்பார்கள் என்பதே' என்று தமிழ்ப் பெண்களின் உண்மை நிலையை உரக்கக் கூறி இருப்பது எதார்த்தம். 
 அடுத்து, 'சுகமும் சுதந்திரமும்' என்னும் கட்டுரையில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நடைபெறும் சர்வாதிகாரப் போக்கு, ஊழல் பற்றி அருமையாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால், நம்ம ஊர் மக்களோ சிங்கப்பூரைப் பாருங்கள், மலேசியாவைப் பாருங்கள், என்று பெருமை பேசுகிறார்கள். இவர்களை என்னவென்று சொல்ல?
 'சினிமாவுக்கு அடிமையான தமிழ் இனம்'  என்னும் கட்டுரையில் "இந்த அளவுக்கு சினிமா அடிமைகளாக இருக்கும் இனம் உலகில் வேறு எங்கும் இல்லை. அதுவும் நல்ல சினிமா இல்லை, கெட்ட சினிமா. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நம் சமூக சீரழிவுக்கு சினிமா தான் பிரதானமான காரணமாக இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இது நூற்றுக்கு நூறு உண்மையே.

 இறுதியாக, சல்மான் கான் பற்றிய தங்களது பதிவு அருமை. சல்மான்கான் மது போதையில் காரை ஓட்டியதால் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் நிரந்தர ஊனம் அடைந்தனர். சல்மான் கானுடன் இருந்த பாதுகாப்பு காவலரின் எச்சரிக்கையையும் மீறி வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பது வழக்கு. அவர் அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக எடுத்த தில்லுமுல்லு முயற்சிகள் அத்தனையும் அவருடைய பணத்தின் அளவையும் செல்வாக்கின் அளவையும் காட்டுவதை படம் பிடித்து காண்பித்து இருக்கிறீர்கள். அருமை. இறுதியாக, சல்மான்கானுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஆனால், அந்த தண்டனையை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
 குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டாமா? இந்தியாவில் ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா? என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.  உண்மை உண்மைதான்.
 இங்குதான் என்னுடைய கேள்வி ஒன்றை தங்களுக்கு வைக்கின்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 18 தமிழ் போலீஸ்காரர்கள் இறந்துபோனார்கள். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரில் தற்பொழுது சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் ஏழு பேர். அவர்கள் ராஜீவ் காந்தி கொலையில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டவர்கள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  
 "குற்றவாளிகள் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள். அதாவது, தமிழர்கள். ஆகவே, அவர்களை வெளியில் விட்டு விடுங்கள்" என்று  அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர், எழுத்தாளர் என்று சிலர் கோரிக்கை வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? அவர்கள் கோரிக்கையில் தாங்கள் உடண்படுகிறீர்களா?
சல்மான் கான் தண்டனை பெற்ற போது, அவரை விடுவியுங்கள் என்று அவர்கள் ரசிகர்கள் கோரிக்கை வைத்ததையும், தமிழர்கள் 7 பேர் சிறையில் இருக்கிறார்கள், அவர்கள் ராஜீவ் காந்தி என்ற ஒரு வடநாட்டுக்காரனை கொன்று விட்டார்கள் என்பதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கலாமா?" என்று கூறுகிறார்களே? இதையும் ஒன்றாகத்தானே பார்க்க வேண்டும்.  சல்மான் கானால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு குரல் கொடுக்கும் தாங்கள், ராஜீவ் காந்தியுடன் 18 தமிழ் போலீஸ்காரர்கள் செத்துப் போனார்களே? அவர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் குடும்பங்களுக்கு நீங்கள் சொல்லும் நீதி என்ன?
 (பின்குறிப்பு: இந்த 7 பேரில் இருவர் தம்பதியர். அவர்களின் மகள் லண்டனில் மருத்துவம் படித்து, மருத்துவராக உள்ளார். பாதிக்கப்பட்ட காவலர் குடும்பத்தார் எப்படி இருக்கிறீர்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதை தாங்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)
புத்தகம் அருமை. அதனால் நீண்ட பதிவை செய்து விட்டேன். மன்னிக்கவும். நன்றி.
  • நூலகர் சி.சரவணன்.


Comments