கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிளை நூலகத்தில்
நூலக வார விழா.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா 6 நாட்கள் கொண்டாடப்பட்டது. கடத்தூர் கிளை நூலகம், கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் முதல் நாளான 14.11.2018 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாம் நாள் வியாழக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் ந.நாகராஜன் ‘இளமையில் கல்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. பெங்களூர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் விஞ்ஞானி ரா.குந்தவை பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளுக்கும் தலைமை ஆசிரியை த.வே. ரமாதேவி தலைமை தாங்கினார். கடத்தூர் கிளை நூலக நூலகர் சி.சரவணன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற புத்தக விற்பனையில் ரூ.12500 மதிப்புமிக்க 340 புத்தகங்களை மாணவியர் வாங்கினர். தொடர்ந்து சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் கடத்தூர் கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
19.11.2018 திங்கட்கிழமை நூல் அறிமுகம் மற்றும் சிறந்த வாசகர்களுக்குப் பரிசளிப்பு விழா கிளை நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடத்தூர் முத்தமிழ் மன்றம் தலைவர் கோ.மலர்வண்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் வி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நூலகர் சி.சரவணன் எழுதிய *ஒரு நூலகரின் டைரி குறிப்புகள்* புத்தகத்தை பொறியாளர் பி.நரசிம்மன் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஜெ.கார்த்திகேயன் பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியை தனலட்சுமி நூலகத்திற்கு ரூ.1000 செலுத்தி புரவலராக சேர்ந்தார். பள்ளி மாணவர்கள் 50 பேர் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். முன்னதாக நூலகர் கி.நீலமேகன் வரவேற்றார். முதல் நிலை நூலகர் சேகர், இருப்பது சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், நெடுமிடல், சுப்பிரமணியம், சிவலிங்கம், வேணுகோபால், கோவிந்தராஜன், சுதாகரன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நூலகர் சி.சரவணன் நன்றி கூறினார்.
மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நூலகத்தை நன்கு பயன்படுத்தும் வகையில் நூலக வளர்ச்சியை மேம்படுத்தி, நூலக விழிப்புணர்வை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக ஏற்படுத்துவதைப் போற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கடத்தூர் கிளை நூலகத்திற்கு தமிழக அரசின் நூலக ஆர்வலர் விருது 14.11.2018 அன்று சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments