ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. 1.மரபு மீறப்படுகிறதா?



பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் மரபு திடீரென்று மீறப்பட்டால்,  அதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டோ? என்கின்ற சந்தேகம் வருவது இயல்பு. 
தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் 17.11.2018 அன்று நடைபெற்ற நூலக வார விழாவில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த மரபு மீறப்பட்டுள்ளதாக நூலக நண்பர்கள் பலர் என்னிடம் கூறி வருத்தப்பட்டனர். இந்தச் செயல் எதிர்காலத்தில் ஒரு தவறான முன் உதாரணமாக ஆகி விடும் என்ற அச்சத்தையும்  நண்பர்கள் என்னிடம் வெளிப்படுத்தினர். 

 சிறப்பாகச் செயல்படும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுவது வழக்கம். ஆசிரியர்களுக்குத் தேசிய அளவிலும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.  மாநில அளவில் அளிக்கப்பட்ட விருதுகள், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அலுவலரிடம் கொடுத்து வாழ்த்து பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கும் சம்பிரதாய நிகழ்வு.

நூலகத் துறையில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது மாநில அளவில் சென்னையில் நடைபெறும் விழாவில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் விழாக்களில் இந்த விருதை அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள்  விருது பெற்ற நூலகர்களுக்கு அளித்துப் பாராட்டுவது என்பது பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் பழக்கம்.  இந்த ஆண்டும் அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நூலக வார விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், நல்நூலகர் விருது வழங்கப்பட்ட நண்பர் திரு. செந்தில் அவர்களுக்கு நல்லாடை அணிவித்து விருது வழங்கிப் பாராட்டிய படம் அவரது முகநூலில் பதிவு செய்து உள்ளார்.  இது தான் நடைமுறை. இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் தருமபுரியில் நடைபெறும் நூலக வார விழாவில் விருது வழங்கப்பட்டவருக்கு நல்லாடை  அணிவித்துப் பாராட்டுவது வழக்கமாக இருந்தது.  ஆனால், இந்த ஆண்டு அப்படி நடந்ததா? என்ற கேள்வி பலர் கேட்கும் படியாக ஆகி விட்டது.  

  இந்த ஆண்டுக்கான நல்நூலகர் விருது திருமதி மாலதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த வாசகர் வட்டத்துக்கான நூலக ஆர்வலர் விருது, நான் பணிபுரியும் கடத்தூர் கிளை நூலகத்திற்கு வழங்கப்பட்டது. தருமபுரியில் இந்த ஆண்டு நூலக வார விழா மாவட்ட மைய நூலகத்தில் 17. 11. 2018 மாலை நடைபெற்றது. அன்று பகல் ஒரு மணிக்கு மாவட்ட நூலக அலுவலர் திரு. ஜெ.கார்த்திகேயன் அவர்களைப் பார்த்து, 19.11.2018 திங்கட்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற உள்ள நூலக வார விழாவில் கலந்து கொள்ள அவரின் ஒப்புதல் கேட்டேன். அப்பொழுது என் கையில் இருந்த பார்சலைப் பார்த்து என்னவென்று கேட்டார். “சிறந்த வாசகர் வட்டத்துக்கான கேடயம்” என்றேன். “எதற்கு?” என்றார். “மாநில அளவில் வழங்கப்படும் விருதுகளை மாவட்ட கூட்டங்களில் மாவட்ட அலுவலரிடம் இருந்து அல்லது சிறப்பு விருந்தினர் அவர்களிடம் இருந்து பெறுவது வழக்கம். இன்று நடைபெறும் கூட்டத்திற்காக இந்தக் கேடயத்தை எடுத்து வந்திருக்கிறேன்” என்றேன். “மாநில அளவில் கொடுக்கப்பட்ட விருதை மீண்டும் நான் கொடுப்பது சரியாக இருக்காது” என்றார். நான் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டேன். கேடயத்தை அங்கேயே வைத்துவிட்டு  வந்து விட்டேன்.
  கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராக வரும் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்குச் சால்வை ஒன்றை நல்லாடையாக  அணிவிப்பது என்று முடிவு செய்து ரூபாய் 375க்கு சால்வை ஒன்றை வாங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்தேன். விழா மேடைக்கு வந்த மாவட்ட நூலக அலுவலர் திரு. ஜெ.கார்த்திகேயன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த என்னை எழுந்து பின்வரிசைக்குச்  செல்லுமாறு கூறினார்.  நான் ஐந்தாவது வரிசையில்  அமர்ந்தேன். திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு நான் சால்வை அணிவிக்க விழா அமைப்பாளர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றியது. “மாவட்ட படைப்பாளர் சங்கம் சார்பாக திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்குச் சால்வை அணிவிக்க நேரம் ஒதுக்கவும்” என்று துண்டு சீட்டில் எழுதி திரு. பழனி ஆசிரியர் அவர்களிடம் கொடுத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. நந்தகுமார் அவர்களிடம் கொடுக்கச் சொன்னேன். 


  உரிய நேரத்தில் “மாவட்ட படைப்பாளர் சங்கம் சார்பில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் சால்வை அணிவிக்கப்படுகிறது” என்று அறிவித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு நந்தகுமார். நான் சால்வை போட்டால் அது சிலருக்கு எரிச்சல் உண்டாக்கும் என்பதால் நான் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்குச் சால்வை அணிவிப்பதைத் தவிர்த்து, அந்தச் சால்வையை திரு. பழனி ஆசிரியர் அவர்களிடம் கொடுத்து போடச் சொன்னேன். அவர் சால்வை போட்டார். நான் என்னுடைய கையில் வைத்திருந்த ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் என்னும் என்னுடைய புத்தகத்தை திரு. லேனா தமிழ்வாணன் அவர்களிடம் வழங்கினேன்.

விழாவில் தலைமை உரையாற்றிய திரு.கார்த்திகேயன் மாவட்டத்தில் வாசகர் வட்டங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்று சில வாசகர் வட்டங்களைப் பட்டியலிட்டார். அந்தப் பட்டியலில் விருது அளிக்கப்பட்ட கடத்தூர் வாசகர் வட்டம் இடம் பெறவில்லை. என் அருகில் அமர்ந்து இருந்த கடத்தூர் வாசகர் வட்ட நிர்வாகி திரு.சுதாகரன் “மாவட்ட நூலக அலுவலர் கடத்தூர் வாசகர் வட்டம் பற்றி ஏன் பேசவில்லை?” என்று கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. மாவட்ட நூலக அலுவலர் பட்டியலிட்ட வாசகர் வட்டங்களுடன் கடத்தூர் வாசகர் வட்டத்தையும் சேர்த்திருக்கலாம்.  அவருடைய நோக்கம் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதே. அதற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை. திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து, விழா தேசிய கீதத்துடன் இனிதே முடிந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. நந்தகுமார் தன் பணியைச் சிறப்பாக செய்து முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி விட்டார். 

  மாவட்ட நூலக அலுவலர் திரு.ஜெ.கார்த்திகேயன் மைக்கை எடுத்து "ஓர் அறிவிப்பு - தற்போது நல்நூலகர் விருது வழங்கப்பட்ட நூலகர் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்” என்று திருமதி மாலதியை அழைத்தார். திருமதி மாலதி மேடைக்கு வந்து திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். திரு.லேனா தமிழ்வாணன் அவர்களும் திருமதி மாலதிக்கு வணக்கம் தெரிவித்து,  ஏதாவது கொடுப்பார்கள், அதைத் திருமதி மாலதிக்குக் கொடுக்கலாம் என்று திரும்பி திரும்பிப் பார்த்தார். யாரும் எதுவும் கொடுக்க வில்லை. திருமதி மாலதியும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டார்.  “நல்நூலகர் விருது வழங்கப்பட்ட நூலகருக்கு 50 ரூபாயில் துண்டு ஒன்று வாங்கிப்போடக்கூட  நூலக ஆணைக்குழுவில் பணம் இல்லையா?” என்று நூலக நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழுந்தது.


  திருமதி மாலதிக்குத் துண்டு போட்டால், வாசகர் வட்ட விருது அளிக்கப்பட்ட எனக்கும் துண்டு போட வேண்டி வரும் என்பதால் அதைத் தவிர்த்து இருக்கிறார்கள்  என்பது எல்லோருக்கும் தெரியும்.

  “அடுத்து, நூலக ஆர்வலர் விருது கடத்தூர் வாசகர் வட்டம்” என்று இரண்டு முறை அழைத்தார் திரு ஜெ.கார்த்திகேயன். நான் மேடைக்கு செல்லவில்லை. மூன்றாம் முறை அழைத்தார். அப்பொழுதும் என் பெயரைக் குறிப்பிடாமல், கடத்தூர் கிளை நூலகம் என்றுதான் அழைத்தார். தமிழக அரசு வழங்கிய நற்சான்றிதழையும், கேடயத்தையும் விழாவிற்கு எடுத்து வர வேண்டாம் என்று சொன்னவர், திடீரென்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?  என்னை மேடைக்கு அழைத்து வெறும் கையில் அனுப்பி அவமானப்படுத்த வேண்டும் என்பதே. இதைப் புரிந்து கொண்டுதான் மூன்று முறை அழைத்தும் நான் மேடைக்குச் செல்லவில்லை. திரு.லேனா தமிழ்வாணன் எனக்காக நிற்கிறாரே என்று உடனே சென்று அவருக்கு வணக்கம் தெரிவித்து, கை குலுக்கி விட்டு வந்தேன். 

  மாவட்ட நூலக அலுவலர் இப்படிச் செய்வார் என்று தெரிந்திருந்தால் அந்தச் சால்வையை அப்படியே வைத்திருந்து திரு லேனா தமிழ்வாணன் அவர்களுக்குச் சால்வை போட்டிருப்பேன். அல்லது மேலும் இரண்டு சால்வை வாங்கி வந்திருப்பேன்.  

இந்த அறிமுக நிகழ்ச்சி, நிகழ்ச்சி நிரலில் இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்குக்கூட சொல்லாமல் இரகசியமாக மனதில் வைத்திருந்து இதைச் சாதித்து இருக்கிறார் மாவட்ட நூலக அலுவலர் திரு ஜெ.கார்த்திகேயன். அவருடைய திறமைக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கு என் மீது அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி? எதுவாக இருந்தாலும் அவர் என்னுடன் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாமே. 
சரி, என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால், பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த மரபை மீறுவது நியாயமா?

Comments