ஏன் இந்த தலைக்குனிவு?

திருப்புரம்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு, இரண்டு நீதிபதிகள் தீர்ப்போடு அநேகமாக முடிந்து விட்டது என்று சொல்லலாம். இருந்தாலும், “நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பி மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூலம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். 
இவர்கள் இருவரும் மாவட்ட நிர்வாகம் முழுவதையும், தங்கள் கைகளில்  வைத்திருக்கும் ஏகபோக அதிகாரம் கொண்டவர்கள். இவர்கள் தலைகுனிந்து நீதிமன்ற படிகள் ஏறுவதைப் பார்க்கும்போது நமக்கு வேதனையாக இருக்கிறது.

 “நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை?” என்ற நீதிபதியின் கேள்விக்கு இவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. பிப்ரவரி 2ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இவர்கள் பதில் மனு தாக்கல் செய்தாக வேண்டும். இவர்களை எச்சரித்து அல்லது மன்னித்து இந்த வழக்கை முடித்து வைத்து விடலாம். ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இவர்களை விடுவதாக தெரியவில்லை. 

இதை பலரும் அரசியலாக பார்க்கிறார்கள். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக தி.மு.க. விசுவாசிகள் பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை.

 ஆனால், இதில் இருக்கும் அரசியலே வேறு. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக (ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே) அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. நிவாரணம் கேட்டு நீதிமன்ற சென்று உத்தரவு வாங்கி வந்தாலும் உயர் அதிகாரிகள் நிவாரணத் தொகை கொடுப்பதில்லை. இழுத்தடிக்கிரார்கள். அதிகம் படிக்காத ஏழைகளாக இருந்தால், அவர்கள் படும் துன்பங்களையும் அவமானங்களையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அவமானப் படுத்துகிறார்கள்.  ‘மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்தார்கள்’ என்று நாம் செய்தித் தாள்களில் அடிக்கடி படிக்கிறோம். அதெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத இப்படிப்பட்ட அதிகாரிகளால்தான்.  

‘நீதிமன்றம் உத்தரவிட்டும் நிவாரணம் வழங்கவில்லை’ என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாலும், அரசு உயர்அதிகாரிகள் அதையும் மதிப்பதில்லை. இவர்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்களாக நினைக்கிறார்கள். எத்தனைமுறை நீதிமன்றம் குட்டு வைத்தாலும், இவர்களுக்கு சூடு, சொரணை இருப்பதில்லை. 

பதவிஉயர்வு கோரும் வழக்குகள் / இழப்பீடு வழங்கக்கோரும் வழக்குகள் / நிவாரணம் கோரும் வழக்குகள் என்று, எந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்தாலும் எந்த உயர் அதிகாரியும் மதிப்பதில்லை. கிடப்பில் போட்டுவிடுகிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 'ஆட்சியாளர்களைவிட நீதிபதிகளுக்குத் தான் அதிகாரம் அதிகம்'. இதை அனைத்து உயர் அதிகாரிகளும் அறிவர். ஆனால், உயர் அதிகாரிகள் சுயநலன் கருதி, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு இப்படியே போனால், ‘நீதிமன்றம் போனாலும் நியாயம் கிடைக்காது’ என்னும் மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள். இது ஆபத்தானது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இதற்கு முடிவு கட்ட வந்தவர்தான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். அதனால்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். கவனிக்கிறார்கள் என்று சொல்வதக் காட்டிலும் ரசிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களும் நிதானமாக விசாரணையை கையாள்கிறார். 

அடுத்து என்ன நடக்கும்? மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஒன்று ஆட்சியாளர்களை காட்டிக் கொடுக்க வேண்டும். அல்லது நீதிபதியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க்க வேண்டும். இதைத் தவிர, இவர்களுக்கு வேறு வழியில்லை. மௌனமாகவே இருந்தால் தண்டனை உறுதி. அது குறைந்த பட்சம் ஒரு நாள் சிறையாகக்கூட இருக்கலாம்.

இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இடையிலுமான ஈகோ வழக்கு அல்ல; நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத உயர் அதிகாரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை மணி என்பதை நன்கு படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள். விவரம் இல்லாதவர்கள் அரசியல் பேசுவார்கள்.

Comments

நம்பி said…
*//நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக தி.மு.க. விசுவாசிகள் பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை//*


ஜி ஆர் சுவாமிநாதன் பாஜக காரர் இல்லை. ஆர்எஸ்எஸ் காரர். அவர் அதனை வெளிப்படையாகவும் பொதுவெளியிலும் பதிவு செய்துள்ளார். தங்கள் கட்டுரையில் அதனை மாற்றி விடுங்கள்.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த ஒரு அங்கமும் பெரியதல்ல. ஒவ்வொரு அங்கமும் இன்னொரு அங்கத்தினால் கேள்விக்குள்ளாகவும் கட்டுப்படுத்தவும் முடியும் வகையிலே இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளது.

தங்கள் கட்டுரையில் மேற்கண்ட திருத்தங்களை செய்து விடுங்கள்.