மெரினா போராட்டமும் நேபாளம் போராட்டமும்
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டத்தால் அந்த நாட்டின் நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும் அரசு அலுவலகங்களும் வாகனங்களும் எரிக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. அமைச்சர்கள் பலரும் தாக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த போராட்டங்கள் எல்லாம் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடத்தப்பட்டன.
ஏன் இந்தப் போராட்டம்?
சமூக ஊடகங்கள் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன . சமூக ஊடகங்களை சிலர் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் நாட்டில் குழப்பம் விளைவிக்கவும், பிறரிடம் பணம் பறிக்கவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகின்றனர். இதனால் பல நாடுகள், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து சட்டங்கள் இயற்றி வருகின்றன. அப்படித்தான் நேபாள சுப்ரீம் கோர்ட்டும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தமாறு அரசுக்கு உத்தரவிட்டது. சமூக ஊடகங்களில் பொழுது போக்கும் இளைஞர்கள் ‘எங்கே சமூக ஊடகங்கள் நிறுத்தப்படுமோ’ என்ற அச்சத்தில் போராட்டங்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவே தொடங்கினர். போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு, போராட்டக்காரர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருங்கிணைவதை தடுக்க சமூக ஊடகங்களை திடீரென முடக்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொழுதுபோக்கு இளைஞர்கள் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் துப்பாக்கிச் சூடு செய்ததில் சில இளைஞர்கள் மாண்டனர்.
27 வயதுக்குட்பட்ட இந்த இளைஞர்களின் நோக்கம் என்ன? இவர்கள் கோரிக்கை என்ன? இவர்கள் கொள்கை? ஜனநாயக ஆட்சி பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? நாட்டின் பொருளாதாரம் பற்றி என்ன தெரியும்? அரசியல் பற்றி என்ன தெரியும்? நாட்டின் வெளியுரவு கொள்கை பற்றி என்ன தெரியும்? உள்நாட்டு வரவு செலவு பற்றி என்ன தெரியும்? இப்படிப்பட்ட எந்த கேள்விக்கும் விடை தெரியாத விளையாட்டுப் பிள்ளைகள்தான் இந்த போராட்டக்காரர்கள். இப்பொழுது சமூக ஊடகங்கள் திறந்து விடப்பட்டன. இவர்கள் இனி இவற்றில் பொழுதை கழிப்பார்கள். அவ்வளவுதான்.
சரி, இனி நேபாளம் என்னவாகும்?
ராணுவம் கையில் நேபாளம் அரசு வந்துள்ளது. 73 வயது ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வயதில் இவர் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார்? யார் யாரை அமைச்சர்களாக நியமிக்க போகிறார்? இவர் நியமிக்கப்படுபவர்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு சில சமூக விரோதிகள் ஆட்சி அமைக்க கோரும் நிலையும் உருவாகலாம்.
மீண்டும் தேர்தல் நடத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தாக்கப்பட்ட கட்டிடங்கள் புதுப்பிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இவை எல்லாம் இந்த மக்கள் தலைமையில் தான் விழும். நாட்டின் வளர்ச்சி பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதைத்தான் Gray zone war என்று சொல்வார்கள். வெளிநாட்டினர் போர் தொடுக்காமல், உள்நாட்டில் இருக்கும் சிலர் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக குழப்பத்தை உருவாக்கி, ஆட்சியை கவிழ்த்து பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு பெயர் தான் இந்த Gray zone war (சொந்த வீட்டுக்கு சூனியம் வைப்பது என்பார்களே அப்படி) அது தற்பொழுது நேபாளத்தில் நடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் நேபாளம் இருப்பதால், சீனாவுக்கு கொண்டாட்டம். நமக்கு ஆபத்து.
கடந்த பல ஆண்டுகளாக முன்பு, மெரினா கடற்கரையிலும் இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது. பொங்கல் விடுமுறையில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது. அது இல்லை என்றதும் பொழுதுபோக்கு இளைஞர்கள் 'பண்பாட்டைக் காப்போம்' என்ற போர்வையில் வெகுண்டு எழுந்து மெரினாவில் திரண்டனர். மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் பிரச்சினையை சாதுர்யமாக கையாண்டன. ஆனால், சில சமூக விரோதிகள் போராட்டத்தில் நுழைந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல், திசை திரும்பியதை மறக்க முடியாது.
இன்றைக்கு நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே தினம் தினம் போராட்டங்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். அன்று வெகுண்டு எழுந்த எந்த இளைஞனும் இவர்களை திரும்பிப் பார்ப்பதில்லை.
சமூக ஊடகங்களுக்கு தடை என்று சொல்லுங்கள். நேபாளத்தை விட பெரிய போராட்டம் வெடிக்கும். நம் இளைஞர்களின் தேசப் பற்று இந்த அளவில் தான் இருக்கிறது.
Comments