மனநிறைவோடு பணி நிறைவு

மனநிறைவோடு பணி நிறைவு

நூலகர் சி. சரவணன்

இன்றோடு (31.5.2025) என் நூலகர் பணி நிறைவடைகிறது; 26 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறேன். 1999இல் பெரும் கனவோடு இந்த துறையைத் தேர்வு செய்தேன். இந்தத் துறையில் நுழைவதே அன்று பெரும் போராட்டமாக இருந்தது. அந்தப் போராட்டம் இன்றுவரை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

அதிகம் படிக்க வேண்டும்; புத்தகங்கள் எழுத வேண்டும்; பத்திரிகைகள் நடத்த வேண்டும் என்பதுதான் என் ஆரம்ப காலக் கனவாக இருந்தது. அதில் கொஞ்சம் நிறைவேறியது. தமிழச்சி என்னும் பல்சுவை மாத இதழைச் சில ஆண்டுகள் நடத்தினேன். நூலகர் குரல் என்னும் சங்கப் பத்திரிகைக்கு இணை ஆசிரியராக இருந்தேன். துறை சார்ந்த பிரச்சினைகள், துறைக்கு ஆலோசனைகள் என்று எல்லாம் தைரியமாக எழுதி வந்தேன். 

நூலகத் துறை எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நூலகர்கள் நலனில் நான் காட்டிய அக்கறையும், போராட்டக் குணமும் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக என்னை உயர்த்தியது. அந்தப் பொறுப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில் நூலகத்துறை வளர்ச்சிக்கு ஆலோசனைகள் பல அப்போது வழங்கி இருக்கிறேன். அவற்றுள் சில நடைமுறைப் படுத்தப்பட்டன. 

நூலகர் நலனுக்காக நான் எடுத்த முயற்சிகள் ஏராளம். நூலகர்கள் பலருக்குப் பணி மாறுதல், மாற்றுப் பணி, காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட பணி மாறுதல்களை ரத்து செய்தல் என்று உதவி இருக்கிறேன். சில நூலகர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு ஏற்பாடு செய்தேன். ஊழியர் நலனுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினேன். மாதந்தோறும் பொது நூலகத்துறை இயக்குநரைச் சந்தித்து நூலகர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டேன்.

 தருமபுரி மாவட்டம் முக்கல்நாய்கன்பட்டியைச் சேர்ந்த திரு.வே.ரமணி அவர்கள் 2007 ஆம் ஆண்டு பொது நூலகத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றபோது, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

 என்னைப் பற்றி விசாரித்தார். நான் கடலூர் மாவட்டம் புவனகிரியில் பணிபுரிவதாகச் சொன்னேன். தருமபுரி மாவட்டத்திற்குப் பணி மாறுதல் வழங்குவதாகச் சொன்னார். உடன் இருந்த நண்பர் முனிராஜ் “மாவட்டத்தில் பணியிடம் இல்லை என்றும் நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டால்தான் பணி மாறுதலுக்கு வாய்ப்பு உண்டு” என்றார். உடனே இயக்குநர், உதவி இயக்குநர் இராமலிங்கம் அவர்களை அழைத்து, நூலகம் தரம் உயர்த்த ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதற்கு உதவி இயக்குநர் இராமலிங்கம் மத்திய அரசு நிதி உதவி செய்தால் மட்டுமே நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்றார். “இதுபற்றி அமைச்சரிடம் பேசுகிறேன்” என்றார் இயக்குநர். 

சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் போட்டுத் தருகிறேன்” என்றார். “சேலம் மாவட்டத்தில் அரசு நிதிப் பணியிடம் இல்லை; நூலக நிதி பணியிடத்தில் போட முடியாது என்கிறார்கள்” என்றேன். “அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி என்னிடம் உடனே விண்ணப்பம் எழுதி வாங்கினார். ஒரு வாரத்தில் எனக்குச் சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆணை வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இயக்குநரை சந்தித்தேன். அப்பொழுது, நூலகங்கள் தரம் உயர்த்துவது பற்றி அமைச்சரிடம் பேசி இருப்பதாகவும் 100 நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்கு அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும், அதில் நமது மாவட்டத்திற்கு 5 நூலகங்கள், அமைச்சர் மாவட்டத்திற்கு 5 நூலகங்கள், மற்ற மாவட்டங்களுக்கு தலா 3 நூலகங்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சில மாதங்களில் அரசாணையும் வெளிவந்தது. உடனே இயக்குநரை சந்தித்துப் பேசினேன். இரண்டு நாட்களில் எனக்குச் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்குப் பணி மாறுதல் உத்தரவு வந்தது. 

திரு.வே.ரமணி அவர்கள் எனக்காகச் செய்த உதவியால் 100 நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டன; 100 பணியிடங்களும் உருவாக்கப்பட்டன என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனைத் தொடர்ந்து 160 நூலகங்கள - 200 நூலகங்கள் - என்று தரம் உயர்த்திக் கொடுத்தார். அத்துடன் அனைத்து வருவாய் வட்ட  நூலகங்களையும் முழு நேர நூலகங்களாகத் தரம் உயர்த்திப் பணியிடங்களையும் உருவாக்கிக் கொடுத்த பெருமை, நமது மண்ணின் மைந்தர் திரு. வே. ரமணியைச் சாரும்.

 அதன்பிறகு இயக்குநராக வந்த திரு. க. அறிவொளி சிறந்த நிர்வாகி ஆவார். அந்தக் காலகட்டத்தில் ‘நூலகர் குரல்’ என்னும் சங்கப் பத்திரிகையை நடத்தி வந்தோம். அந்த பத்திரிகையில் நூலகத் துறை மேம்பாட்டுக்குப் பல்வேறு ஆலோசனைகள் கட்டுரை வடிவில் எழுதி வந்தேன். நூலகங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோ லிப் என்னும் பணம் செலுத்திப் பயன்படுத்தும் மென்பொருளுக்கு பதிலாக, இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களில் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்று விரிவான கட்டுரை எழுதினேன். அதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் Koha என்னும் இலவச மென்பொருளை நூலகங்களில் பயன்படுத்த உத்தரவிட்டார். 

ஒரு நாள் மாலை 5 மணிக்கு, இயக்குநர் க. அறிவொளி அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து, “எதிரும் புதிரும் -நூலகர்களும் அமைச்சுப் பணியாளர்களும்” கட்டுரையை இப்பொழுதுதான் படித்தேன். அருமையாக இருக்கிறது. இரண்டு பக்கப் பிரச்சனைகளையும் நடுநிலையோடு எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பாக உள்ளன. வேறு பத்திரிகைகளுக்கு எழுதுகிறீர்களா?” என்று கேட்டார். “சிற்றிதழ்களுக்கு எழுதி வருகிகிறேன்” என்றேன். “பெரிய பத்திரிகைகளுக்கு எழுதலாம்; அதற்கான தகுதி உங்கள் கட்டுரையில் இருக்கிறது. வாழ்த்துகள்!” என்றார். 

இந்திய நூலகத் தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தினமணிக்கு அனுப்பினேன். அவரது பிறந்த நாளான 12.8.2011 அன்று அந்தக் கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரையில் நூலகர்களுக்கு வழங்கப்படும் நல் நூலகர் விருதை இந்திய நூலகத் தந்தை எஸ். ஆர். ரங்கநாதன் விருது என்று வழங்க வேண்டும் என்று கோரி இருந்தேன். அந்தக் கட்டுரை வெளிவந்து இரண்டு வாரம் கழித்து இயக்குநர் க.அறிவொளி அவர்களைச் சங்கம் சார்பாகச் சந்தித்தோம். அப்பொழுது இயக்குநர் “உங்கள் கட்டுரையில் நீங்கள் வைத்திருந்த கோரிக்கை பற்றி அரசு கருத்துரு கேட்டு இருக்கிறது. சாதகமாகப் பதில் அளித்திருக்கிறேன்” என்றார். “அடுத்த ஆண்டு முதல் இந்திய நூலக தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் விருது என்று வழங்கப்படும் என்று நினைக்கிறேன் என்றார். அவர் கூறியது போலவே அடுத்த சில மாதங்களில் அரசாணையும் வெளிவந்தது. 

அதனைத் தொடர்ந்து, காப்போம் அரசு பள்ளிகளை! என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை பள்ளிகள் தொடர்புடையது என்பதால் என் மனைவி ஆசிரியராக இருப்பதால் அவரிடம் காண்பித்துத் திருத்தம் செய்து, தினமணிக்கு அனுப்பினேன். 12.9.2011 அன்று அந்தக் கட்டுரை டெல்லி பதிப்பு  உட்பட அனைத்து பதிப்புகளிலும் தலையங்க கட்டுரையாக வெளிவந்தது.

 அந்தக் கட்டுரையில் அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் ஆங்கில வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் எழுதியிருந்தேன். அடுத்த சில மாதங்களில் மூன்று அரசாணைகள் வெளிவந்தன. 1. சோதனை அடிப்படையில் 100 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். 2. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும். 3. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படும். 

பள்ளி நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, நூலகமும் மாணவர்களும் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தினமணிக்கு அனுப்பியிருந்தேன். 2.5.2017 அன்று பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற அதே நாளில் அந்தக் கட்டுரை  தினமணியில் வெளிவந்தது. ஆய்வுக் கூட்டத்தின் பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பள்ளி நூலகங்களின் நிலை குறித்து அமைச்சரிடம் வினா எழுப்பப்பட்டபோது, “பள்ளி நூலகங்கள் மேம்படுத்தப்படும்” என்று அறிவித்தார். “இந்த நாளில் என்னுடைய கட்டுரை வெளியானதால் எனக்கு ஏதேனும் பிரச்சினை வந்து விடுமோ?” என்று பயந்தேன். ஆனால், அவ்வாறாக எதுவும் நடக்கவில்லை. மாறாகப் பள்ளி நூலகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாதப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

 2016ஆம் ஆண்டு கடத்தூர் கிளை நூலகத்தில் வாசிப்பை நேசிப்போம் என்னும் இயக்கம் தொடங்கி - 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நூலக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தினோம். 

2018 பிப்ரவரி 2, 3 தேதிகளில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் அகில இந்திய நூலக மாநாட்டிற்குக் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்புமாறு அன்றைய மாவட்ட நூலக அலுவலர்  திரு. கார்த்திகேயன் அவர்களும் முதல் நிலை நூலகர் திரு. கோ. சேகர் அவர்களும் என்னிடம் கூறினர். மாநாட்டு மலரில் வெளியிடக் கட்டுரை தேர்வானால் மாநாட்டில் அதுபற்றிப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினர். நூலகங்களின் சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்னும் என்னுடைய நீண்டகால எண்ணத்தை அனைவரும் அறியச் செய்ய இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணிக் கட்டுரை எழுதினேன். 

பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று தலைப்பில் புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் சேர்த்துக் கட்டுரை எழுதி அனுப்பினேன். என்னுடைய கட்டுரை தேர்வாகி மாநாட்டு மலரில் இடம் பெற்றது. மாநாட்டில் பேச எனக்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.  மதியம் உணவு இடைவேளையின்போது இயக்குநர் இராமேஸ்வர முருகன் என்னை அழைத்துக் கட்டுரை சிறப்பாக இருந்தது என்று பாராட்டு தெரிவித்தார்.

“பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களாக பணிபுரியவர்களுக்குச் சிறப்புக் காலமுறை ஊதியம் வழங்கப்படும்” என்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அறிவித்தார். ஆனால், நூலகத் துறையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேரத் துப்புரவுப் பணியாளர்களுக்கு அது பொருந்தாது என்று இயக்குநர் வட்டாரங்கள் தெரிவித்தன. 

பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் வழக்கு தொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் யாரும், மாவட்ட நூலக அலுவலரை எதிர்த்து வழக்கு போட முன்வரவில்லை. கடைசியாக நான் பணிபுரியும் கடத்தூர் நூலகத்தில் பணிபுரியும் பகுதிநேரத் துப்புரவுப் பணியாளரை வைத்து வழக்கு தொடுத்தோம். வழக்கு வெற்றி பெற்றது. பிறகு அனைவருக்கும் சிறப்புக் காலமுறை ஊதியம் கிடைத்தது.

 பொது நூலகத்துறை இயக்குநராக 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்கள் நூலகத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நூலகர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிப்பதன் அவசியம் குறித்து அவரிடமும் நான் எடுத்துரைத்தேன். 

வெளிப்படையான நூல் கொள்முதல் திட்டத்தை அறிவித்தார் இயக்குநர். நூலகங்களுக்கு நூல் தேர்வு செய்வது தொடர்பான உயர்மட்ட குழுவில் நூல் மதிப்பீடு செய்யச் சில நூலகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தக் குழுவில், என்னையும் இடம் பெறச் செய்தார் இயக்குநர். எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஓராண்டுக்குள் முழுமையாக முடித்துக் கொடுத்தேன். 

மாவட்டம்தோறும் இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவது என்று நூலகத்துறை அறிவித்தது. தருமபுரி மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக என்னை இயக்குநர் நியமித்தார். அதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை இயக்குநர் இளம்பகவத் அவர்களே வழங்கினார். பயிற்சி முகாமில் அதிக ஈடுபாடு காட்டியதற்காக எனக்கு இயக்குநர் நினைவுப் பரிசு வழங்கினார். 2024ஆம் ஆண்டு ஜெயம் கலை அறிவியல் கல்லூரியிலும், 2025ஆம் ஆண்டு தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலும் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தேன். 

ஒடசல்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி, சில்லாரஹள்ளி ஊர்ப்புற நூலகங்கள் என் முயற்சியால் தொடங்கப்பட்டது. சில்லாரஹள்ளி ஊர்ப்புற நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி அவர்களிடம் தொடர்ந்து நான் கோரிக்கை வைத்ததன் விளைவாக புதிய கட்டடம் கட்டப்பட்டது.  

நூலகத்துறையில் நான் மேற்கொண்ட சில பணிகளை இங்கு நினைவு கூறியுள்ளேன். எழுத இன்னும் பல இருக்கின்றன.  காலம் கருதி இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறாக, என்னாலான பணிகள் மேற்கொள்ள பலரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்ததை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 

என்னுடைய வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர் பொதுநூலகத் துறை அலுவலர் சங்கத்தின் நிறுவனர் திரு. எம்.ஜி.செல்வம் அவர்கள். அவர் என் மீது காட்டிய அன்பு, அவரால் எனக்குக் கிடைத்த பலருடைய நட்புகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்கிறேன். அவருக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

என்மீது அன்பு வைத்து, நான் வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஏற்று, தீர்வு வழங்கிய பொது நூலகத்துறை இயக்குநர்கள், மாவட்ட நூலக அலுவலர்கள் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் ஆரம்பகாலத்தில் என்னோடு சங்கப் பணி ஆற்றிய சென்னை ஜி. வெங்கடேசன், என். செல்வம், நா. அண்ணாதுரை, ஊட்டி மொ.பாண்டியன், கோவை ஆ.இளங்கோவன், திருவண்ணாமலை சுகந்தி, கிருஷ்ணன், திருவாரூர் கல்யாணக்குமார் முதலானோர் என்மீது காட்டிய  அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

 சங்கப் பணியில் என் நிழலாக இருந்துவந்த தருமபுரி டி.சண்முகம், எம்.முனிராஜ், எம்.சரவணகுமார் ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் நினைத்துப் பார்க்கிறேன். 

கடத்தூர் வாசகர் வட்டத் தலைவர் மருத்துவர் வெ. சந்திரசேகரன், பொருளாளர் பாவலர் கோ.மலர்வண்ணன், காலம்சென்ற நூலகர் டி.முருகன், புலவர் நெடுமிடல் கோ.மகாலிங்கம், கா.ராதாகிருஷ்ணன், கே.டி.முருகன் ஆகியோரின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகளை பதிவு செய்கிறேன்.   

 எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய பணிகள் தொய்வின்றி சிறப்பாக அமைய, அன்பும் ஆதரவும் கொடுத்து  வந்ததோடு, அவ்வப்போது நிதி உதவியும் செய்துவந்த என் மனைவி இரா.முத்துலட்சுமி, குழந்தைகள் கோவரசி, அகிவரசு ஆகியோருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு என்னுடைய பணிகள் போற்றும்படியாக அமைய அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

 மனநிறைவோடு பணி நிறைவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி, வணக்கம்.

 


Comments

sathyan said…
ஐயா தாங்கள் திறம்பட பணியாற்றி பல சீர்திருத்தங்களை நடைமுறைக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்.
மிக்க மகிழ்ச்சி .
தங்களது ஓய்வு காலத்தில், புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் பரவலாக்க முயற்சி செய்வீர்களாக.
Anonymous said…
தங்களது நூ லகர் பணி தான் நிறைவு பெற்றதே தவிர தாங்கள் இன்னும் நிறைய பணிகளை செய்து நூலக வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன் - வெ.தர்மராஜ் ,சட்ட நூலகர் (ப. நி) சட்டாத்துறை தலைமைச் செயலகம் சென்னை- 9