இயக்குநர் நியமனம் - நூலகத் துறைக்கு விடிவு காலமா?

பொது நூலகத்துறை இயக்குநராக திரு க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.  அவர்கள் 12.7.2023 அன்று பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. பொது நூலகத் துறை இயக்குநர் பணியிடம் கடந்த 12 ஆண்டுகளாக காலியாக இருந்தது. இதனால், பொது நூலகத் துறையின் வளர்ச்சியும், நூலகர்களின் நலனும்  பெரிதும் பாதிக்கப்பட்டது. 
பொது நூலக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அரசு பலமுறை நடவடிக்கை எடுத்தது. பெறப்பட்ட விண்ணப்பங்களில் சரியான நபர்/ தகுதியான நபர் யாரும் கிடைக்காததால்தான், அரசு இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது தற்காலிக ஏற்பாடா? இறுதியான முடிவா?  என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், அரசு எடுத்த இந்த முடிவை நான் வரவேற்கிறேன். 
பிளாஷ்பேக்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு பொது நூலகத்துறை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களில் சிலர் நூலகத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த திரு.வே.ரமணி, திரு. க. அறிவொளி ஆகியோரின் பணிக் காலம் நூலகத்துறையின் பொற்காலம் என்று சொல்லலாம்.
திரு.வே.ரமணி அவர்களின் பணிக்காலத்தில், பதவி உயர்வு தொடர்பான வழக்குகளால் நூலகர்களுக்குப் பதவி உயர்வு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்ததையெல்லாம் சரி செய்து, நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மேலும், அவருடைய பணிக் காலத்தில்தான் ஏராளமான ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகவும், கிளை நூலகங்கள் முழு நேர நூலகங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டன. சில நூலகர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளால் பதவி உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 
சென்னை எல்எல்ஏ கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது; பல மாவட்டங்களில் நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவ்வாறு, திரு.வே.ரமணி அவர்களின் காலம் நூலகத் துறையின் பொற்காலமாக இருந்தது.
அடுத்து வந்த திரு. க. அறிவொளி அவர்கள், நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்தினார். ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. வருவாய்க் கோட்ட தலைமையிடங்களில்  வருவாய்க் கோட்ட நூலகங்கள்(RDCL) அமைக்கப்படும் என்று அரசாணை பெற்றுத் தந்தார்.  (ஆனால், அந்த அரசாணை இன்று வரை அமுல்படுத்தப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நூலகம் கூட தரம் உயர்த்தப்படவில்லை.) 
நூலகர்களுக்கு வழங்கப்படும் நல்நூலகர் விருது டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் பெயரில் வழங்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அதற்கான அரசாணையை பெற்றுத் தந்தார்.
நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆட்டோலிப் மென்பொருளால் நூலகத் துறைக்கு செலவு அதிகமாக ஆவதால், கோஹா என்னும் இலவச மென்பொருள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. பதிப்பாளர்கள் பட்டியல் மற்றும் அரசாணைகள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டன. பதிப்பாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது.   
இவ்வாறு நூலகத்துறை சிறப்பாக இயங்கி வந்த நிலையில்,  நூலகர்கள் சிலர்,  இயக்குநர் பதவி மீது ஆசைப்பட்டு, இயக்குநர் பதவி நூலகர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதி அரசர் திரு. சந்துரு நடைமுறைச் சிக்கல்களை ஆராயாமல், அரசாணையை அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதனால், பொது நூலகத்துறை இயக்குநராக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள் வருவது முடிவுக்கு வந்தது.  பொது நூலகத்துறை இயக்குநர் பதவி காலியாகிவிட்டது. இயக்குநர் பதவிக்கு நூலகத்துறையில் சரியான நபர் யாரும் இல்லை என்று அரசு முடிவு செய்ததால், நூலகத்துறை இயக்குநர் பொறுப்பு பள்ளிக் கல்வி இயக்குநர்களிடமே கூடுதல் பொறுப்பாக கடந்த 10 ஆண்டுகளாக  கொடுக்கப்பட்டுவந்தது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடங்களில் ஒரு இடம் குறைந்ததற்கு நூலகர்கள்தான் காரணம் என்று  பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் கோபம் கொண்டதால்தான்  நூலகத் துறை மீது அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.
இந்த நிலையில்தான் தற்பொழுது ஐஏஎஸ் அலுவலர் திரு.க. இளம்பகவத் அவர்கள் பொது நூலக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திரு. க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்கள் பொது நூலகத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவரும் வந்த புதிதில் நூலகத் துறை வளர்ச்சிக்கு, நூலகச் சேவையை மேம்படுத்துவதற்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நூலகத்துறைக்கு விடிவுகாலம் வந்து விட்டது என்ற நம்பிக்கை நமக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு திரு. க.இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கொடுத்தது. இதனால், அவரால் நூலகத்துறைக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது. இதன் விளைவாக,  அரசின் சிறப்புத் திட்டங்களான நூலக நண்பர்கள் திட்டம், இலவச wifi திட்டம் முதலான திட்டங்களின் செயல்பாடுகள் போற்றும்படியாக இல்லை. 
இந்த பட்ஜெட்டில் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தவும், நூலகர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான அரசாணைகள் வெளிவரவில்லை. அரசாணைகள் முன்னதாக வெளிவந்தால் மட்டுமே, திட்டங்கள் திட்டமிட்டு செயல்படுத்த முடியும். 
இலவச wifi திட்டம் தொடக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. மாதம் தோறும் wifi க்கான  கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால், அந்தத் திட்டத்தின் பயனை பயனாளிகளுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று நூலகர்களுக்குத் தெரியவில்லை. எல்லாம் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றன. wifi வசதி உள்ள நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு மட்டுமாவது உடனடியாக கணினிப் பயிற்சி அளிக்க வேண்டும்.
நூலகத்துறைக்கு முழு நேர இயக்குநராக திரு. க. இளம்பகத் ஐ.ஏ.எஸ். அவர்கள் தற்போது நிமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது பணி சிறக்க என்னுடை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி அவர் நூலகத்துறைக்கு அதிக நேரம் ஒதுக்குவார் என்று நான் நம்புகிறேன்.  இயக்குநர் அவர்கள் நூலகர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசுவதன் மூலம் நூலகர்கள் பிரச்சனைகள் களைய வாய்ப்பு உள்ளது. மூத்த, முன்னோடி நூலகர்களை அழைத்துப் போசுவதன் மூலம் நூலகச் சேவைகளை மேம்படுத்த முடியும்.
தமிழகத்தில் உள்ள துறைகளில் சிறப்பாக இயங்கும் துறை நூலகத்துறைதான் என்று போற்றும்படியாக நூலகத் துறை மாறும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
- சி.சரவணன், ஆசிரியர், 
 நூலகர் செய்திமடல். 
வாட்ஸ் ஆப்: 8668192839, மின்னஞ்சல்: noolagarseithi@gmail.com 

Comments

Nalla munneduppu. Noolaga thuraiyum noolagarum valarvargal