நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவோம்!

சி. சரவணன்

உலகில் உள்ள இலட்சக்கணக்கான உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி வசதியாக வாழ்ந்து வருகிறான். ஏனைய உயிரினங்கள், தாங்கள் தோன்றியபோது எப்படி வாழ்ந்தனவோ, அப்படியே இன்றும் வாழ்ந்து வருகின்றன.

காடுகளிலும் மலைகளிலும், விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்த மனிதர்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மொழியைக் கண்டுபிடித்து, வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வந்தனர். அடுத்தடுத்து வந்த தலைமுறை மனிதர்கள், முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை, தற்காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தி வந்ததால், மனித சமூகம் நாகரிக சமூகமாக மாறியது. 

மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், தோல்கள், சுட்ட களிமண் தகடுகள், ஓலைச் சுவடிகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் பதிவு செய்து வந்தனர். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, புத்தகங்கள் மனிதர்களின் அறிவை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரம் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக இருக்கின்றன.  மனிதனை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. மனிதனை அறிவுலகத்திற்கு இழுத்துச் செல்வன புத்தகங்களே. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள். இவ்வாறு மனிதர்களின் அறிவை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றும் புத்தகங்களைச் சேகரித்து, தேவைப்படுவோருக்குக் கொடுக்கும் இடம்தான் நூலகம்.

 நூலகத்துக்குச் சென்று புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிப்பது அலாதியானது. அதை அனுபவிக்க மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வந்தனர். மாணவர்கள் விடுமுறை நாட்களில் பாடப்புத்தகத்துக்கு அப்பாற்பட்ட புத்தகங்களை எடுத்துப் பார்க்கவும், படிக்கவும் நூலகங்களுக்குச் சென்று வந்த காலம் உண்டு.

  ஆனால், இன்றைய நூலகங்கனின் பயன்பாடு எப்படி இருக்கிறது? பத்திரிகைகள் படிக்க, நூல் இரவலாக பெற, குறிப்புகள் எடுக்க என்று நூலகத்துக்கு வரும் அனைத்துத் தரப்பு வாசகர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. 

படித்த இளைஞர்கள் மட்டும் ஓரளவு நூலகங்களுக்கு வருகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வுக்குப் படிக்கத்தான் வருகின்றனர்.  இன்று பொது நூலகங்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான தளமாக மாறி வருகின்றன.  இது வரவேற்க்கத்தக்கது. ஆனால்,  இது ஆரோக்கியமானதல்ல.  

பொது நூலகம் என்பது சிறுவர், மகளிர், மூத்த குடிமக்கள் முதலான அனைத்துத் தரப்பு மக்களுக்கான, தொடர் வாசிப்புக்கான களமாக இருக்க வேண்டும்.    நாளைய சமுதாயத்தைக் கட்டமைப்பவர்கள் இன்றைய மாணவர்கள். மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்த பொது நூலகத் துறை பள்ளிகளுக்கே சென்று பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குவது, நூலக தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று புத்தகங்கள் வழங்குவது முதலான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இவை எல்லாம் போதுமானதாக இல்லை.

நூலகம் குழந்தைகளுக்குரியது என்னும் எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். 

பொது நூலகங்களில் சிறுவர் பகுதிதான் இல்லையே தவிர, குழந்தைகளுக்கான நூல்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு நூலகத்திலும் சிறுவர் பிரிவு தேவை. நூலகங்களில் இட நெருக்கடி இருக்கலாம். இருந்தாலும், ஒவ்வொரு நூலகத்திலும் குறைந்தபட்சம் சிறுவர்கள் படிப்பதற்கான அலமாரி,  சிறிய நாற்காலிகள் இருப்பது அவசியம். சிறுவர்களைக் கவரும் விதமாகச் சிறுவர் பகுதி இருக்க வேண்டும். நூலகத்தில் சிறுவர் பகுதி ஏற்படுத்துவதன் மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

குழந்தைகளைக் கவரும் வகையிலான சிறிய சிறிய நூல்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாரம்தோறும் குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகளை நூலகங்களில் நடத்தலாம். நூலகங்களில் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம்  நூலகத்திற்குக் குழந்தைகளை வரவைக்க முடியும்.

போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பாடநூல்கள் மட்டும் படிப்பது போதுமானதாக இருக்காது. நூலகத்திற்குச் சென்று பல்வேறு நூல்கள் படிப்பதன்மூலம் பரந்த அறிவை மாணவர்கள் பெற முடியும். மாணவர்களை அறிஞர்களாக ஆக்குவதில் வகுப்பறைக்கு இணையானது நூலகம். அந்த நூலகத்தை இளமைப் பருவத்திலேயே முறையாகப் பயன்படுத்துபவர்கள்தான் அறிஞர்களாகிறார்கள் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் உள்ளூர் நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் உள்ளூர் நூலகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும். 

நூலகத்தைக் குழந்தைகளுக்குரியதாக மாற்றும் பொறுப்பை நூலகர் ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.  விடுமுறை நாட்களில்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, உறுப்பினர்களாகச் சேர்த்து, நூலகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள, பயிற்சி அளிக்க முன்வர வேண்டும்.

புத்தகங்களை இரவல் கொடுத்து, அவற்றை வாங்கி வைப்பது மட்டுமே நூலகரின் சேவை என்று இல்லாமல், நூலகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை என்று நூலகர்கள் செயல்பட வேண்டும்.  இன்றைக்கு நூலகர்களில் சிலர் நூலகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் படைப்பாளர்களையும் பதிப்பாளர்களையும் இலக்கிய அமைப்புகளையும் நூலகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவர்கள் மூலம் நூலகத்தில்  வாசிப்பு தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை நடத்த முடியும். 

ஒவ்வொரு நூலகத்திலும் வாரந்தோறும் 'நூல் அறிமுகக் கூட்டம், நூல் திறனாய்வுக் கூட்டம், இந்த வாரம் நான் படித்த நூல்' முதலான தலைப்புகளில் நிகழ்சிகள் நடத்துவது நல்ல பயனைத் தரும். 

நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவோம்! அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம்!

 அனைவருக்கும் பொது நூலக நாள் நல்வாழ்த்துகள்!

(22.5.2023 பொது நூலக தினம்)

கட்டுரை: சி. சரவணன், மூன்றாம் நிலை நூலகர், கிளை நூலகம், கடத்தூர், தருமபுரி மாவட்டம்.அலைபேசி : 8668192839, மின்னஞ்சல்: saravanan.c.kadathur@gmail.com வலைதளம்: www.kadathurlibrary.com

கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள நூல்கள்:

  1.  ஒரு நூலகரின் டைரி குறிப்புகள்
  2. தகடூர் நாடு செந்தமிழ் நாடு.
  3.  இந்தியாவில் நூலக வளர்ச்சி
  4. கத்தரிகாய் சாம்பார் ( நகைச்சுவை கட்டுரைகள்)


 

Comments