புத்தகத் திருவிழாக்களில் நூலகர்கள் ஒதுங்கி இருப்பது ஏன்?

 மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் அதற்கு 4.96 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்று தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. அறிவிப்பு வெளியான அன்றே, தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் திரு த. உதயசந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.  "ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன; தமிழக அரசு தனியாக புத்தகத் திருவிழாவை நடத்துவதை விட மேற்படி அமைப்புகளுடன் இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்துவது சிறப்பாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்தார். "அவ்வாறு செய்யலாம்" என்று பதில் அளித்தார் திரு. த. உதயசந்திரன் அவர்கள். (திரு த. உதயசந்திரன் 2019 ஆம் ஆண்டு தர்மபுரி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது)

 இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி திவ்யதர்ஷினி அவர்களை புத்தகப் பேரவை நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, மாவட்ட நிர்வாகமும் தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து புத்தகத் திருவிழா நடத்துவது என்று முடிவு செய்து, நாள் குறிக்கப்பட்டது.

புத்தகத் திருவிழாவிற்கு அரசு ஒதுக்கியுள்ள பணம் நூலக இயக்ககம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு வரலாம் என்று நான் நினைத்தேன். அவ்வாறே நடந்தது. 

தருமபுரி புத்தகத் திருவிழா ஜூன் 24 தொடங்கி ஜூலை 4 இல் நிறைவடைந்தது. 

"புத்தகத் திருவிழாவில் நூலகத் துறையின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்" என்று மாவட்ட நூலக அலுவலர் அவர்களிடமும், நூலகர்களிடமும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

 தகடூர் புத்தகப் பேரவை நிர்வாகக் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் நூலகத்துறைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அமைக்கப்பட்ட 100 கடைகளில், ஆறு கடைகள் அரசுத் துறைகளுக்கும், ஒரு கடை மாவட்ட படைப்பாளர் சங்கத்திற்கும் என்று ஒதுக்கப்பட்டன. இவற்றிற்கு வாடகை இல்லை. மற்ற கடைகளுக்கு வாடகை ரூ.7500.

6 கடைகளில், இல்லம் தேடிக் கல்விக்கு இரண்டு கடைகள், நூலகத் துறைக்கு ஒரு கடை, மீதமுள்ள மூன்று கடைகள் இதர அரசுத்துறைகள் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்டன.

 இல்லம் தேடிக் கல்வி அலுவலர்களும் அதன் தன்னார்வளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதர அரசுத் துறைப் பணியாளர்கள்  ஒவ்வொரு நாளும் தங்கள் துறைகளின் வளர்ச்சிப் பணிகளை காட்சிப்படுத்தினார்.

 நூலகத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த கடை காலியாக இருந்ததால், அந்தக் கடையையும் இல்லம் தேடிக் கல்வி அலுவலர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

 தருமபுரி புத்தக திருவிழாவுக்கான உத்தேச பட்ஜெட் 25 லட்சம்.  இதில் பாதி அளவுக்கான தொகை 12 இலட்சம் பொது நூலகத்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வளவு பிரம்மாண்டமான புத்தகத் திருவிழாவில் நூலகர்களின் பங்கு ஒன்றும் இல்லாமல் போய்விடக்கூடாது என்று, நூலகத் துறை சார்பாக ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது மேடையில் நடத்தலாம் என்று மாவட்ட நூலக அலுவலரிடம் கூறினேன். "எந்த செலவும் இல்லாமல் ஏற்பாடு செய்யுங்கள்" என்றார். புத்தகத் திருவிழாவில் பகல் நேர நிகழ்ச்சிகளுக்கான நேரம் ஒதுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி, ஜூலை நான்காம் தேதி "தருமபுரி மாவட்டப் படைப்பாளர்களின் நூல்கள் அறிமுக விழா, மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் நடத்தப்படும்" என்று அழைப்பிதழில் அச்சிட ஏற்பாடு செய்தேன். 

மேலும், புத்தக திருவிழா அழைப்பிதழில் முதல் நாளும் இறுதி நாளும் மாவட்ட நூலக அலுவலர் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

நூல் அறிமுக விழாவும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு நூலகர்கள்  கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

யாரையும் குறை சொல்லும் எண்ணம் எனக்கில்லை.  பெருமைக்காகவும் இந்தப் பதிவை நான் எழுதவில்லை.

"நூலகர்கள் சிந்திக்க வேண்டும்; மாவட்ட நூலக அலுவலர்கள் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். மாவட்ட நூலக அலுவலர்கள் தங்களுக்குள் விவாதிக்க வேண்டும்" என்பதற்காகத்தான் இந்த பதிவு.

மலர் கண்காட்சியும், மாங்கனி கண்காட்சியும் அந்தந்தத் துறை அலுவலர்கள்தானே நடத்துகிறார்கள்.    

புத்தகக் கண்காட்சியை நூலகர் கள்தானே முன்னின்று நடத்த வேண்டும்? நூலகர்களும் மாவட்ட நூலக அலுவலர்களும் ஒதுங்கி இருப்பது  ஏன் என்று தெரியவில்லை.

  சில மாவட்டங்களில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் புத்தகத் திருவிழா அழைப்பிதழ்களில் மாவட்ட நூலக அலுவலர் பெயர் இடம்பெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 

நூலகர்கள் இனியாவது விழித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். 

நூலகத் துறையின் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு இல்லையா? இதை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது? 




Comments

புத்தகங்கள் என்றால் நாமாக தெரிந்து கொள்ளலாம் நூலகத்துறை தான் முக்கிய பொறுப்பு மற்றும் கடமையும் இருக்கிறது. நூலகர்கள் தினமும் ஒரு குழுவை நியமித்து நமது துறையின் திட்டம் குறித்து விளம்பரம் செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். வருங்காலத்தில் நடக்கும் என்று நம்புவோம். நம்புவோம். மு குமரன் நாய்க்கன்கொட்டாய்
சிறப்பான பதிவு நண்பரே