எஸ் ஆர் ரங்கநாதன் விருதுக்கு நூலகர்கள் தேர்வு செய்யப்படுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!
ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் நூலக வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசு சிறப்பாக பணிபுரியும் நூலகர்களுக்கு நூலகத் துறை சார்பில் டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் விருது வழங்கி கவுரவிக்கிறது.
இந்த விருது மாவட்டத்திற்கு ஒரு நூலகர் என்று தேர்வு செய்து சென்னையில் நடைபெறும் விழாவில் கல்வித் துறை அமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம்.
நூலகர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவது பற்றிய விமர்சனம் ஆண்டுதோறும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் விருதுக்கு தேர்வு செய்யப்படும் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாதது தான்.
எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், மாவட்ட நூலக அலுவலர்கள் இரகசியமாக பரிந்துரை செய்யும் நூலகர்கள் பட்டியலை விழா குழு பரிசீலனை செய்து அறிவிப்பதாக சொல்லப்படுகிறது.
பல மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்றும், சில மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், முறையாக தேர்வு செய்யப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
இதில் முறைகேடு நடப்பதாகச் சில நூலகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். தகுதியுடைய நூலகர்கள் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமார்ந்து போவதுண்டு.
விமர்சனத்திற்கு ஆளாகாமல் வெளிப்படைத்தன்மையோடு சரியான நபர்களைத் தேர்வு செய்ய மாவட்ட நூலக அலுவலர்களால் முடியாதா?
அரசு இயந்திரம் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டுமே ஒழிய, அதில் எந்த ஒரு ரகசியமும் தேவையில்லையே!
பொதுவாக விருது என்றாலே விண்ணப்பித்து பெறுகின்ற நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறை சரியான நடைமுறை என்று கூற முடியாது.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 'எந்த மாணவன் நன்றாகப் படிக்கிறான்?' என்று உயர் அதிகாரி கேட்டால் அந்த வகுப்பு ஆசிரியர் 'மதிப்பெண் பட்டியலை பார்த்து சொல்கிறேன்' என்று கூற முடியுமா? அப்படி கூறினால் அவர் சிறந்த ஆசிரியராக இருக்க முடியுமா? 50, 100 மாணவர்களில் நன்றாக படிக்கும் மாணவர் யார்? சரியாக படிக்காத மாணவர்கள் யார் யார் என்று அறிந்து வைக்காத ஆசிரியர் யாரேனும் இருப்பாரா?
அது போலத் தான் ஒரு மாவட்டத்தில் நூறு, நூற்றைம்பது பணியாளர்கள் மட்டுமே பணிபுரியும் போது, அவர்களில் யார் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? யார் யார் சரியாக பணியாற்றுவதில்லை என்று ஒரு மாவட்ட நூலக அலுவலரால் தெரிந்திருக்க முடியும்.
நிலைமை இப்படி இருக்க, பணியாளர்களை விண்ணப்பிக்கச் சொல்லி அவர்களில் ஒருவரை தேர்வு செய்வது என்பது சரியான நடைமுறை இல்லை. இருந்தாலும் அரசு விதிகளின்படி நூலகர்கள் விருதுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.
நூலகத் துறையில் பணிபுரியும் நூலகர்களில், விருதுக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று மாவட்ட நூலக அலுவலர்கள் பலரும் நடுநிலையோடுதான் பரிந்துரை செய்கிறார்கள்.
ஆனால், சல மாவட்டங்களில் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் சிலர் சர்ச்சையில் சிக்கித் தவிப்பது உண்டு.
விருதுக்கு தேர்வு செய்ய பெறப்படும் விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள் அந்தந்த மாவட்ட நூலக அலுவலகத்தில் நூலகர்களின் பார்வைக்கு ஒரு படியை ஏன் வைக்க கூடாது?
அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஒரு நகலை நூலகரின் பார்வைக்கு வைத்தால் இதுபோன்ற சர்ச்சையில் மாவட்ட நூலக அலுவலர்கள் மாட்டிக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. முறைகேடு நடப்பதாக சொல்லப்படுவதையும் தவிர்க்க முடியும்.
இனி, வரும் ஆண்டுகளில் இதுபோன்ற வெளிப்படைத் தன்மையோடு மாவட்ட நூலக அலுவலர் நடந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக.
Comments