மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்.
(இளந்தமிழர் பேரவைை- நடத்திய பன்னாட்டுக் கலைத் திருவிழா போட்டிகளில் 18 முதல் 30 வயதினருக்கான கட்டுரைப் போட்டியில் எங்கள் மகள் ச.கோவரசி எழுதிய *' மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்' இந்தக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.)
மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்.
ச.கோவரசி,
(த/பெ. சி.சரவணன்)
மூன்றாம் ஆண்டு - இளநிலை வேளாண்மை
வாணவராயர் வேளாண்மை கல்லூரி _ பொள்ளாச்சி,
வீட்டு முகவரி :
1/47 பி, இந்திரா நகர், கடத்தூர்,
தருமபுரி- 6353 03
முன்னுரை :
மெல்ல தமிழினிச் சாகும் – என
சொல்லக் கேட்கும் மனங்கள் வேகும்.
அவ்வாறு வெந்து போகின்ற மனங்களில் என் மனமும் ஒன்று. பல்வேறு காலங்களிலும் பல்வேறு இடர்களிலும் நாம் எண்ணிலடங்காதவற்றை இழந்திருக்கிறோம். அவை அனைத்தையும் தாண்டி நின்ற தமிழ் தம்முள் பல்வேறு இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. ஒரு குடிசை எரிந்து விட்டால் ஓர் ஊரே அழிந்துவிடும் எனச் சொல்வது ஏற்கத்தக்கது அன்று. அவ்வாறு தான் தமிழும். வெல்லும் தமிழ், இனி எவ்வாறு மெல்ல மெல்ல வாழும் என்பதைக் காண்போம்.
பொய் என்னும் காட்டுத் தீ
எதிர்மறையான கருத்துகளைப் பேசியே பழக்கப்பட்டு விட்ட சமூகம் இது. அவ்வாறு தான் தமிழ் அழிந்து கொண்டு வருகின்றது என்ற கருத்தும் பரவி வருகின்றது. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. நம் கலாச்சாரம், அடையாளம், உணர்வுகள் என அனைத்துமே தமிழ் தான். ஒரு மொழி அழிகிறதென்றால் அம்மொழி பேசும் ஒவ்வொரு தனி மனிதனின் அடையாளமும் அழிந்து வருகிறது என்று தான் பொருள். மாறாக, தமிழர்கள் இன்று மலைகளைக் கடந்தும் கடல்களைக் கடந்தும், தனக்கென தனி அடையாளம் பெற்று வாழ்கின்றனர். ஆயிரம் பிரெஞ்சுக் காரர்களின் மத்தியில் ஒற்றைத் தமிழனால் தமிழில் உரையாட முடியாது. அங்கே அவன் தமிழில் பேசவில்லை என்று தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஏளனம் செய்வது ஏற்கத்தக்கது. "உலகத்தோடு ஒட்டஒழுகல்" என அங்கும் அவன் தமிழனின் வாக்கைப் பின்பற்றுகிறான். பேசுவதால் மட்டுமே ஒரு மொழி வளர்ச்சி அடையும் என நினைப்பது தவறு.
தமிழ்,மெல்ல மெல்ல அழிந்து வருவதாக எனக்குத் தெரியவில்லை. மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி பெற்று வருவதாகத் தான் தெரிகின்றது. புதியன புகுத்தி வருகின்றது. புதியனவற்றிலும் புகுந்து வருகின்றது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அனைத்து செயலிகளுக்கும், அறிவியல் கலைச்சொற்களுக்கும் இணையான சொற்கள் தமிழில் உண்டு. தமிழ்ப் புத்தகங்களை எந்த மூலையில் இருந்தும் படிக்கும் வசதி உள்ளது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தேடு தளங்களில் "சென்ற ஆண்டு அதிகமான கட்டுரைகள் எழுதப் பட்ட மொழி தமிழ்' என்பதைப் பார்க்கும் போது தெரிகிறது தமிழ் செழித்து வாழும் என .
தேடலில் தெரியும் தமிழின் வாழ்வு :
வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான தேடலில் தெரிகிறது மெல்ல மெல்ல தமிழ் வாழுமென்று. வெளிநாட்டு மக்கள் சிலர் தமிழ் மீது அன்பு கொண்டு தமிழைக் கற்று பிழையின்றி பேசி வருகின்றனர்.மேலும், தமிழின் பல்வேறு நிலைப்பாடுகளை அறிய பல்வேறு நாட்டினர் தமிழ்நாட்டில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் கூட தமிழ் மருத்துவத்தை தேடுபவர்களைக் காணும் போது தமிழுக்கான தேடல் கண்கூட தெரிகிறது.
வளரும் தலைமுறையினரிடத்தில் தமிழ்|
இளைஞர்கள் ஒன்றிணைந்து தத்தமது துறைகளில் மாத இதழ்களை வெளியிட்டு வருகின்றனர். ' பட வரி முதலான தளங்களில் தமிழில் போட்டிகளை நடத்தி தமிழை மீட்டு வருகின்றனர். இளைஞர்களின் சிறப்பான மரபுக் கவிதைகளைப் படிக்கும் போது தமிழ் மெல்ல மெல்ல வாழும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது.
முடிவுரை:
பெரும்பாலான மொழிகளுக்குச் சொற்களைக் கடன் கொடுத்த தமிழ் ஏதேனும் ஒரு வடிவில் வாழ்ந்து கொண்டே இருக்கும். தமிழ் முற்றிலும் அழிந்துவிடும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை. பிறக்கும் குழந்தையும் "அம்மா' என தமிழ் தாயின் விரல் பிடித்து நடந்து வரும். சேலைக் கட்டி தெருவில் நடக்கும் பெண்கள் இருக்கும் வரை நாணத்தில் கூட தமிழ் வாழும்.
தமிழ் என்ன சுண்ணக் கட்டியா? உடனே தேய்ந்து விட. அது படிகக் கல் போன்றது. அவ்வளவு எளிதில் அரித்து செல்லப்படாது. அள்ளிக் கொடுக்கும் அட்சயப் பாத்திரம் போன்றது தமிழ். வாழவைத்துக் கொண்டே இருக்கும்.
ஆம்! மெல்ல மெல்ல தமிழ் இனி வாழும்|
தரணி தனை ஆளும் .
Comments