தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்.

அரசு ஊழியர் பணி ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 

ஓய்வு பெறும் வயது ஓராண்டு உயர்த்தப்படுவதாகக் கூறும் அரசாணையில், அதிகபட்ச பணி ஆண்டுகள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை.  இது தான் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்று சிலர் கூறுவதற்குக் காரணம்.

இந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற இருப்பதால் அவர்களுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்பதாலும்,  கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்க இயலாது என்பதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

எது எப்படி இருப்பினும்,  பங்களிப்பு ஊதியத் திட்டத்தில் (CPS) இருக்கும்  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர்.  

 ஏப்ரல் 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசு அறிவித்து விட்டது.  இந்த நிலையில் 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்கள் ஏராளம். அவர்களிடம் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதாக தமிழக அரசு பிடித்தம் செய்த தொகை என்ன ஆனாது?   என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் இல்லை.  

ஓய்வு பெற்றவர்களில் ஒருவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. அவர்களிடம் என்ன சொல்லி அரசு 10 சதவிகித ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதோ, அதை அரசு செய்யவில்லை. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியமாக வழங்க வில்லை.  

ஓய்வு பெற்றவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு  இவர்களிடம் பிடித்தம் செய்த பணமும், அரசு அதற்கு இணையாக வழங்கிய பணமும் வட்டியுடன் கொடுப்பதாக அரசு ஒப்புக் கொண்டது. அந்தத் தொகையை வைத்துக்கொண்டு வயதான காலத்தில் அவர்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும்? வாங்கிய கடனுக்கும், குடும்பச் செலவுக்கும் அந்தப் பணம் சரியாகப் போய் விடுகிறது. 

பொதுவாக அரசு ஊழியர் என்றால் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறுபவர்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட எந்தவொரு நலத்திட்டமும்  கிடைப்பதில்லை.  

 இந்த குறுகிய பணிக்காலத்தில் இவர்கள் எதிர்காலத்திற்காக எவ்வளவு தான் சேமித்து வைக்க முடியும்? 

இப்பொழுதெல்லாம்  35-40 வயதில் தான் அரசுப் பணி  கிடைக்கிறது. பணி புரிவதோ 15, 20 ஆண்டுகள் மட்டுமே. யாரும் 30 ஆண்டுகள் வேலை செய்வதில்லை. மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம்,  சிறப்புக் காலமுறை ஊதியம் என்று குறைந்த ஊதியத்தில் எந்த பணிபாதுகாப்பும் இல்லாமல் பணிபுரிகிறார்கள் ஏராளம். 

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது 2003க்குப் பிறகு பணியில் இருந்த, ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கும், சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம்  பெறுபவர்களுக்கும் சற்று ஆறுதலாக இருக்கிறது. 

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சந்திஷ்கார், மணிப்பூர், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயது 62 ஆகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், அருணாசலப் பிரதேசம், பீகார், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர்,  மகாராட்டிரம், மிஜோரம், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்காளம், திரிபுரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பணி ஓய்வு பெறும் வயது 60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான நாடுகளில் பணி ஓய்வு வயது 65 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டையும் தமிழக அரசும் பின்பற்றி வரும் இந்த வேளையில்,  மத்திய அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு நிர்ணயித்துள்ள பணி ஓய்வு வயதைப் போல, தமிழக அரசும், தமிழக அரசு ஊழியர்களுக்கு, "60 வயது அல்லது 33 ஆண்டுகள் பணி, இதில் எது முன்னதாக வருகிறதோ  அந்த நாள் பணி ஓய்வு பெறும் நாள்" என்று நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டால் 33 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஏராளமானோர் ஓய்வு பெறுவார்கள். படித்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நன்றி. 

நூலகர் சி.சரவணன் (8668192839).



Comments

Unknown said…
உண்மையான உணர்வுபூர்வமான பதிவு