ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் - பாகம் 2. ஆ). நல்நூலகர் விருதும் சர்ச்சைகளும்


    விருது என்றாலே உடன் வருவது சர்ச்சை. அது மாவட்ட அளவில் வழங்கப்படும் சாதாரண விருதாகட்டும், தேசிய அளவில் வழங்கப்படும் பத்ம விருதாகட்டும்  சர்ச்சைகளுக்குப்  பஞ்சமில்லை.

      சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணம், விருதுக்குப் பரிந்துரை செய்பவர்களின் விருப்பு வெறுப்பே. பொது நூலகத்துறையில்  நூலகர்களுக்கு வழங்கப்படும்  டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன்  நல்நூலகர் விருதுக்கு மட்டும் விதிவிலக்கா?
     இதோ என்னுடைய அனுபவம்.
    ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை நடைபெறும் நூலக  வாரவிழாவில்  சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் என்று தேர்வு செய்து,  டாக்டர்  எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
    நூலகரின் பணிக்காலத்தில் சேர்க்கப்பட்ட புரவலர்,  உறுப்பினர்,  பெறப்பட்ட நன்கொடைகள், காலி மனை, கட்டட வசதி ஆகியவை மட்டுமே விருதுக்கான முக்கியத் தகுதிகளாக  எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
    இவையெல்லாம் நூலகத்துக்கான கட்டமைப்பு மேம்படுத்தும் பணியே தவிர,  வாசகர்களுக்கான நூலகச் சேவையன்று.
    டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது நன்கொடை திரட்டுவதற்கா? நூலகச் சேவைக்கா?  என்கின்ற கேள்வி  எழுகிறது.
    ஒரு நூலகர்,  வாசகர்களுக்கும்,  மாணவர்களுக்கும் செய்ய வேண்டிய சேவைகள் ஏராளமாக இருக்கின்றன. அதையெல்லாம் சிறப்பாகச் செய்துவரும் நூலகரை  ஒதுக்கிவிட்டு,  அவரைவிடக் கூடுதலாகச் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்கொடை திரட்டியவருக்கு விருது  வழங்கும் நிலை தொடர்கிறது.
   நான் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தில் மாநிலப் பொதுச்செயலாளராக 4 ஆண்டுகளுக்கும்  மேலாகப்  பொறுப்பிலிருந்தேன். அப்பொழுது,  நல்நூலகர்  விருதுக்கு நூலகர்களைப் பரிந்துரை செய்யும் மாவட்ட நூலக அலுவலர்கள் நடுநிலையோடு நடந்துகொள்வதில்லை என்று சில  மாவட்டங்களிலிருந்து  நூலக நண்பர்கள் சொல்வார்கள்.
மாவட்ட நூலக அலுவலர்கள் தாங்கள் சார்ந்த சங்கத்திற்குச் சாதகமாகவும், பணம் பெற்றுக்கொண்டும்,  வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்த்தும்தான் பரிந்துரை செய்வதாகச் சொல்வார்கள். அதையெல்லாம் நான்  அப்பொழுது நம்பியதில்லை.
ஆனால், அவர்கள் கூறியவை எல்லாம் உண்மையாக இருக்குமோ? என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது. காரணம் என்னுடைய அனுபவமே.
விருதுக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் எனக்கு எப்பொழுதும் இருந்ததில்லை.  விண்ணப்பித்துப் பெறுவதா விருது?  விருது என்பது விண்ணப்பித்துப் பெறுவது அன்று,  அவர்களாகவே பாராட்டிக் கொடுக்க வேண்டியது. ஆனால், விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்னும் நடைமுறை இருக்கிறது. அதை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
   என்னுடன் பணிபுரிந்த நூலக நண்பர் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தியதால், கடந்த ஆண்டு டாக்டர்  எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்கான விண்ணப்பத்துடன் 94 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கொடுத்தேன்.
   வாசகர் வட்டத்துக்கான நூலக ஆர்வலர் விருதுக்கும் விண்ணப்பம் கொடுத்தேன். அது  65  பக்கங்கள் கொண்ட கோப்பாகக் கொடுத்தேன்.
   மாவட்டத்தில் எந்த நூலகரும் செய்யாத அளவுக்கு நூலகத்தில் விழாக்கள்,  விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறேன். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று நூலக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறேன்.  5 ஊர்ப்புற நூலகங்கள் தொடங்கியிருக்கிறேன். புரவலர் சேர்க்கை, உறுப்பினர் சோக்கை,  தளவாடங்கள் நன்கொடை பெற்றதுடன்,  தொடங்கப்பட்ட நூலகங்களுக்கு  காலிமனை  பெற்றுத் தந்திருக்கிறேன்.
  அத்துடன், நான் தினமணியில் இந்திய  நூலகத்தந்தை  எஸ்.ஆர்.ரங்கநாதன்,  வாசிப்பை நேசிப்போம், மாணவர்களும் நூலகமும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தினத்தந்தியில் புத்தகக் காப்பகமா நூலகங்கள்?  என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறேன். 
   2011இல் தினமணியில் நான் எழுதிய இந்திய  நூலகத்தந்தை  எஸ்.ஆர்.ரங்கநாதன் என்னும் கட்டுரையில் நூலகர்களுக்கு வழங்கப்படும்  நல்நூலகர்   விருது  டாக்டர்  எஸ்.ஆர்.ரங்கநாதன் பெயரில் வழங்க வேண்டும் என்று  அரசுக்கு நான்  வைத்த கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான்  2012 முதல்  எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது  என்பது  அனைவருக்கும்  தெரியும்.
    டெல்லி பதிப்பு வரை லட்சக்கணக்கானோர் என்னுடைய கட்டுரைகளைப் படித்திருக்கிறார்கள். இவையெல்லாம் மக்களிடையே வாசிப்பு,  நூலகம் தொடர்பான விழிப்புணர்வையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
   அத்துடன்,  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அகில இந்திய நூலக மாநாட்டில் தமிழ்நாடு பொது நூலகங்களில் சேவைகள் – மேம்படுத்த வேண்டியதன் தேவை என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துப் பேசினேன். அக்கட்டுரை மாநாட்டு வெளியீட்டில் வெளிவந்துள்ளது.
   கடத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூலக வாரவிழா மலர்கள் இரண்டு வெளியிட்டுள்ளேன். என்னுடைய சேவையைப் பாராட்டி இயக்குநர்கள் முனைவர் க.அறிவொளி,  முனைவர் ச.கண்ணப்பன்,  முனைவர் வை.குமார் ஆகியோர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைச் செய்திகள் விண்ணப்பத்துடன்  இணைத்திருந்தேன்.
    சில  தினங்களுக்கு  பிறகு நான் பணிபுரியும் நூலகத்துக்கு வந்த மாவட்ட நூலக அலுவலர் திரு.ஜெ.கார்த்திகேயன், “என்னுடைய துறை அனுபவத்தின் இப்படி ஒரு கோப்பு பார்ப்பது இரண்டாவது முறை,  அவ்வளவு  சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்று  நான்  எஸ்.ஆர்.ரங்கநாதன்  விருதுக்கும்,  நூலக  ஆர்வலர்  விருதுக்கும் கொடுத்த ஆவணங்களைப்  பற்றி  புகழ்ந்து பேசினார்.  அவர் இரண்டு  விருதுக்கும் பரிந்துரை  செய்வார் என்று  நம்பினேன்.
    இதைப்பற்றி  நூலக நண்பர் ஒருவரிடம் கூறினேன்.
    “விருதுக்கு உன்னையெல்லாம் பரிந்துரை செய்யமாட்டார்கள்  என்றார்.
    “என்னப்பா, இப்படி சொல்றே?” என்றேன்.
   “ஆமாம். ஆபீஸ்ல என்ன என்ன கூத்து நடக்குதுனு உனக்குத் தெரியாதா?  உனக்கு விருது கொடுத்தாங்கனா  நான் ஒரு காதை  அறுத்துக்கொள்கிறேன்  என்றார்.
    அவர் விளையாட்டாகச் சொல்கிறார் என்று நான்  நினைத்தேன்.
   அடுத்த சில நாட்களில் விருது தேர்வு  தொடர்பாகச்  சென்னை சென்றுவந்த திரு. ஜெ.கார்த்திகேயன் அடுத்த நாளே, புதியதான இரண்டு கோப்புகளை தயார்செய்தார். ஒன்று தருமபுரி மாவட்ட மைய நூலகத்துக்கு நூலக ஆர்வலர்  விருதுக்குப்  பரிந்துரை,  மற்றொன்று திருமதி.மாலதிக்கு  எஸ்.ஆர்.ரங்கநாதன் விருதுக்குப் பரிந்துரை. அன்று மைய நூலகத்தில் பணியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.
    என்னை அழைத்த திரு. ஜெ. கார்த்திகேயன்  அவரசக்  கோப்பு  ஒன்று  இருக்கிறது,  அதை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும், உங்கள் நூலகத்தில் மாற்றுப்பணியில் பணிபுரியும்  நூலகரை அனுப்புங்கள்  என்றார்.
    அப்படி என்ன  அவசரக்  கோப்பு?  என்று  அவரிடம்  நான் கேட்கவில்லை. காரணம்,  அது என்ன கோப்பு என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.
    விருதுக்கான என்னுடைய விண்ணப்பங்களை ஓரங்கட்ட நடக்கும் சதிக்கு,  நான் பணிபுரியும் நூலகத்தில் பணிபுரியும் நூலகரையே பயன்படுத்தினார்கள். இந்த சதியில் அவர்மட்டும் இல்லை. யார்யார் இருக்கிறார்கள்  என்பதெல்லாம்  எனக்கும்  தெரியும்,  பலருக்கும்  தெரியும்.
    இதைப்பற்றி அந்த  நூலகரிடம்  கூறினேன். அவரோ, “அப்படியென்றால் நான்  சென்னை செல்லவில்லை,  வேறு யாரையாவது அனுப்பட்டும்  என்றார். அவரை வற்புறுத்தி அனுப்பினேன். அவருக்கு  பயணப்படியாக  ரூ.1320  பெற்றுக் கொடுத்தேன். கொரியரில் அனுப்பியிருந்தால் ரூ.50இல் முடிந்திருக்கும். அடுத்த நாள் காலை 11 மணிக்குப் போய் சேர்ந்திருக்கும். இவர் மூலம் அனுப்பினாலும் அதே நேரம்தான். அந்தக் உறையை நான் பிரித்துப்  பார்த்து ஒட்டிக் கொடுத்தனுப்புவேன் என்று அந்தச்  சதிகாரர்கள்  எதிர்பார்த்தார்.
    ஆனால்,  எனக்கு அவர்களைப்போல் கீழ்த்தரமான எண்ணம் இல்லாததால்,  அவர்கள் கொடுக்கும்  உறையை  நூலகத்துக்கு எடுத்துவர வேண்டாம் என்றும்,  பிரித்துப்பார்க்க வேண்டாம் என்றும் அந்த  நூலகரிடம் கூறிவிட்டேன்.  அவரும் அவ்வாறே செய்தார்.
    எல்லா மாவட்டங்களில் இருந்தும் விருது பெறுபவர் விவரங்கள் வெளியாகின. தருமபுரி மாவட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. விழாவுக்கு ஒருநாள் முன்னதாக காலை 11 மணிக்குத் தருமபுரி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் திரு.கோ.சேகர் தொலைப்பேசியில்  என்னைத் தொடர்புகொண்டு  நூலக ஆர்வலர் விருதுக்கு உங்கள் நூலகம் தேர்வாகியிருக்கிறது,  வாழ்த்துகள் என்றார்.  இதை நான்  எதிர்பார்க்கவில்லை.
    “நூலக ஆர்வலர் விருது மைய நூலகத்திற்கு வழங்கியிருக்கலாமே?”   என்றேன்.  எங்களைவிட அதிகமான ஆவணங்கள் நீங்கள் வைத்ததால் உங்கள் நூலகம் தேர்வாகியிருக்கிறது என்றார்.
     நல்நூலகர்  விருதுக்கு யார் தேர்வாகி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால்,  அதைத் தவிர்த்து,  வாழ்த்துக்கு நன்றி கூறி முடித்தேன்.
    அப்படியென்றால்  எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது  யாருக்கு?  என்னைவிடச்  சிறப்பாகப்  பணிபுரியும்,  அதிகமான ஆவணங்கள் வைத்தவர் யாராக இருக்க வேண்டும்?  என்று யோசித்தேன்.
    அரை மணிநேரம் கழித்து மாவட்ட நூலக அலுவலர் திரு.கார்த்திகேயன்  தொலைப்பேசியில்  தொடர்புகொண்டு, “வாழ்த்துக்கள்  என்றார்.
எதற்கு வாழ்த்து? ”  என்றேன்.
முதலில் வாழ்த்து, பிறகு எதற்கு வாழ்த்து என்று சொல்கிறேன்  என்றார்.
வாழ்த்துக்கு நன்றி என்றேன்.
உங்கள் நூலகம் நூலக ஆர்வலர்  விருதுக்குத்  தேர்வாகியிருக்கிறது. நாளை  நடைபெறும் விழாவில்  வாசகர்  வட்டத் தலைவருடன்  பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
சரி”, என்று முடித்தேன்.
    எனக்கோ,  நான்  பணிபுரியும் நூலகத்துக்கோ எந்த  விருதும் வந்துவிடக்கூடாது என்று எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள். ஆனால்,  அதையும் தாண்டி நான் பணிபுரியும்  நூலகம் நூலக ஆர்வலர் விருதுக்குத் தேர்வானது  எப்படி என்று தெரியவில்லை. இந்தக் கேள்விக்கு இன்றுவரை எனக்கு விடை தெரியவில்லை.
நிற்க.
    நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும்போது அவர்களின் அர்ப்பணிப்பான சேவை,  புதிய கண்டுபிடிப்பு,  ஆய்வுக் கட்டுரை வெளியீடு,  நூல் வெளியீடு முதலானவை கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆனால்,  நூலகத்துறையில்  இவையெதுவும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் உறுப்பினர் சேர்க்கை,  புரவலர் சேர்க்கை,  நன்கொடை,  காலிமனை,   கட்டட வசதி இவைதான்.  இவையெல்லாம் நூலகச் சேவையா?  இவையெல்லாம்  கட்டமைப்பு, அடிப்படை வசதிகள். இதற்கும் மேல் நூலகச் சேவை இருக்கிறதே?  அதைப்பற்றியெல்லாம்  நூலகப் பணியாளர் கூட்டங்களில் பேசிவந்த  திரு. ஜெ. கார்த்திகேயன்,  என்னுடைய விண்ணப்பத்தைப் பரிந்துரை செய்யும்போது கருத்தில் கொள்ளாதது ஏன்?  அவரை  சுதந்திரமாகச் செயல்பட விடாமல் செய்தவர்கள் யார்யார்?  ஒரு முழுநேர மாவட்ட நூலக அலுவலரே சுதந்திரமாகச் செயல்பட முடியாதபோது, பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர்களால் எப்படி சுதந்தரமாகச் செயல்பட முடியும்? 
    இதனால்,  அர்ப்பணிப்போடு செயல்படும் நூலகர்களுக்கு அங்கீகாரம்  கிடைக்காமல் போகிறது.
    மேலும்,  இவ்வாண்டு  இந்தியாவில் நூலக வளர்ச்சி என்னும்  தலைப்பில்  நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறேன். வாசிப்பை நேசிப்போம்,  புன்னகைக்கும் புத்தகங்கள்,  பொது நூலகங்களின் சேவைகள், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் நூலகர்கள் ஆகிய தலைப்புகளில் வானொலி நேரலை நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு குடியரசு நாள் விழாவில்,  நூலகத்துறையில்  சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர்  எனக்கு  நற்சான்றிதழ்  வழங்கியுள்ளார்.
   இவ்வாண்டும் என்னுடைய மனு நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும் விண்ணப்பம் கொடுத்திருக்கிறேன். கடந்த ஆண்டு எனக்கு விருது வழங்கப்படவில்லை என்பதற்காக நான் வருத்தப்பட்டதில்லை,  இந்த  ஆண்டும்  வருத்தப்பட  போவதுமில்லை.
    இருந்தாலும்,  இதை எப்படியாவது ஒழுங்குபடுத்தியாக வேண்டும் என்கின்ற முயற்சியே  இந்தப் பதிவு.
   விருது தேர்வுக்கான விதிமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்,  விருது தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு, சங்கப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.
                               நன்றி.

Comments

பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலைதான் தான் சகோ
உறுப்பினர்,புரவலர்,நன்கொடை,தளவாடங்கள் சேர்க்கை தவிர நூலகத்தைச் சார்ந்த சேவை மற்றும் தனிப்பட்ட திறமைகள் ஆகியவற்றையும் பரிந்துரைக்கலாம்(பல்வேறு பணியாளர்களின் தனிப்பட்ட திறமைகள்)
நூலகர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. நூலகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற பதிவுகளை பதிவு செய்கிறேன். மற்றபடி தனிநபர் தாக்குதல் எதுவும் இல்லை. சம்மந்தப்பட்ட நபர்களை வெறுக்கவில்லை. அவர்கள் செயல்களைத்தான் வெறுக்கிறேன்.
உண்மை. உறுப்பினர், புரவலர், நன்கொடை தளவாடங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கூடிய கட்டம் ஏற்பாடு செய்து இருந்தும், வாசகர்களை நூலகத்துக்கு வரவைக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் என்ன பயன்?