ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 11. .இயக்குநருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்:
முனைவர் க.அறிவொளியைத் தொடர்ந்து திரு.க.அன்பழகன் அவர்கள் 21.9.2011 அன்று பொது நூலகத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றார். எட்டு மாதங்கள் மட்டுமே அவர் பணிபுரிந்தாலும் சிறப்பாகச் செயல்பட்டார்.
இயக்குநருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்:
‘நூலக
அறிவியல் படித்தவர்கள் மட்டும் பொது நூலக இயக்குநராகப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று
பொது நூலகத்துறையில் பணிபுரியாத ஒருவர் தொடுத்த வழங்கில், ஏற்கெனவே
உள்ள விதிமுறைகளின்படி ‘நூலக அறிவியல் படித்தவர்தான்
இயக்குநராக நியமிக்கப்படவேண்டும்’ என்று தீர்ப்பு
அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின்
பின்னணியில் நூலகர்கள் சிலர் இருந்துள்ளனர்.
அந்தத் தீர்ப்பை மாவட்ட நூலக அலுவலர்களும் நூலகர்களும் பெரிதாக வரவேற்றனர். வரலாற்றுச்
சிறப்பு மிக்கத் தீர்ப்பு என்றெல்லாம் வர்ணித்தனர். ஆனால், என்னைப்
பொருத்த வரையில் அது நூலகர் நலனுக்கு எதிரான தீர்ப்பு என்று ஒவ்வொரு கூட்டத்திலும்
கருத்து தெரிவித்தேன். நான் நூலகர்களுக்கு எதிராகப்
பேசுவதாகப் பலரும் என்னை விமர்சனம் செய்தனர்.
அந்தத் தீர்ப்பை
எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு தமிழக
அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், எனது
கோரிக்கை ஏற்கப்படவில்லை.
என்னைப் பொருத்தவரை இயக்குநர்
பணியிடம் நூலகரைப் போலத் தொழில்நுட்பப் பணியிடம் அன்று. அது ஒரு நிர்வாகப்
பணியிடம். நூலகர்களை நியமிப்பது, அவர்களுக்குப்
பயிற்சி அளிப்பது, புதிய புத்தகங்களை வாங்குவது, நூலகக்
கட்டடங்களைக் கட்டுவது, பராமரிப்பது, ஆயிரக்கணக்கான
பணியாளர்களின் பணிகளைக் கண்காணிப்பது, ஊதியம்
உள்ளிட்ட பணப் பயன்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள நூலக அறிவியல்
படித்த நூலகரால்தான் முடியுமா? பல ஆண்டுகள் முதன்மைக்
கல்வி அலுவலராகவும், இணை இயக்குநராகவும்
பணிபுரிந்து பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றவர்களால்
நூலகத்துறை இயக்குநராகச் சிறப்பாகச் செய்ய முடியாதா?
சர்க்கரை ஆலை, காகித
ஆலை,
பால்வளம், போக்குவரத்துக்
கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள்
அந்தந்தத் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களா? வருவாய்த்
துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணிபுரிந்தவர்கள்தாமே பொதுத் துறை
நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் எல்லாம்
சிறப்பாகப் பணி புரிவதில்லையா?
இதைவிட மிக முக்கியமாகக்
கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு இயக்குநரின்
செயல்பாடு நூலகர்களுக்குத் திருப்தியில்லை என்றால் அவர் எப்பொழுது மாறுதலில்
போவார்?
அடுத்து
யார் இயக்குநராக வருவார்? என்று நூலகர்கள்
எதிர்பார்ப்பது வழக்கம். அல்லது இயக்குநரை மாற்றக் கோரி அமைச்சரிடமும், துறைச்
செயலரிடமும் கோரிக்கை வைக்க முடியும்.
நூலக அறிவியல்
படித்தவர்தான் பொது நூலகத்துறை இயக்குநராக வரவேண்டும் என்ற விதியின்படி 45
வயதுடைய நூலக அறிவியல் படித்த ஒருவர் இயக்குநராக வந்துவிட்டால், அவரது
செயல்பாடு நூலகர்களுக்குத் திருப்தி இருந்தாலும்,
திருப்தி இல்லை என்றாலும் அவர் ஓய்வு பெறும் வரை நூலகர்களால்
ஒன்றும் செய்ய முடியாது. விதியே என்று நொந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறையில்
இருந்து நூலகத்துறைக்கு வந்த இயக்குநர்கள் நூலகத்துறை வளர்ச்சிக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளைக்
குறைத்து மதிப்பிட முடியுமா?
அதனால்தான் பள்ளிக் கல்வித்துறையில் உள்ளவர்கள் பொது
நூலகத் துறைக்கும் இயக்குநர்களாக வருவது நூலகர்கள் நலனுக்கு நல்லது என்று அந்தத்
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு
தமிழக அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன்.
6
ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது நூலகத்துறை இயக்குநர் பணியிடம் காலியாகவே உள்ளது.
வழக்கு தொடுத்தவரும், வழக்கு தொடுக்க நிதி உதவி
செய்த நூலகர்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தெரியவில்லை.
இயக்குநர் பணியிடம்
காலியாக இருப்பது வசூல் செய்யும் பலருக்குச் சாதகமாக இருக்கிறது. இதனால்
பாதிப்படைவது நூலகர்கள்தாம். நூலகர்களும் இப்படிப்பட்டவர்களைத்தாம்
நம்புகிறார்கள். நூலகர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியம் கிடைக்காமல்
போனதும் இதனால்தான். அன்று என் கருத்தை
விமர்சனம் செய்தவர்கள் இன்று அதை ஏற்றுக்கொண்டனர்.
திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் பொது
நூலகத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்பு:
பொது நூலகத்துறை
இயக்குநர் பணியிடம் காலியான பிறகு, கூடுதல்
பொறுப்பு,
தொடக்கக்
கல்வி இயக்குநராக இருந்த திரு.வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
பொது நூலகத்துறை அலுவலர்
சங்கம் சார்பாக திரு.எம்.ஜி.செல்வம் தலைமையில் இயக்குநரைச் சந்தித்து வாழ்த்து
தெரிவித்தோம். இயக்குநரை அதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப் பேசிய ஞாபகம் வந்தது.
ஆனால்,
எங்கே
எப்போது என்று தெரியவில்லை. வீட்டிற்கு வந்து பழைய கோப்புகளைப் பார்த்த போதுதான்
தெரிந்தது.
5.5.2000
முதல் 9.5.2000
வரை டி.பி.இ.பி. ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வார பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு
செய்திருந்தேன். அப்போது தருமபுரி மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்ட
ஒருங்கிணைப்பாளராகத் திரு.வி.சி. இராமேஸ்வர முருகன் அவர்கள் இருந்தார். அவரைச்
சந்தித்துத் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி முகாம் நடத்த விரும்புவதாகவும், அதற்கு
5
ஆசிரியர் பயிற்றுநர்களை அனுப்பி வைக்குமாறும் கடிதம் அளித்தேன்.
நான் கேட்ட ஆசிரியர்
பயிற்றுநர்களைத் திரு.வி.சி. இராமேஸ்வர முருகன் அவர்கள் விடுவித்துப் பயிற்சி
முகாமுக்கு அனுப்பி வைத்தார். பயிற்சி
முடிந்ததும் ஆசிரியப் பயிற்றுநர்கள் விடுவிக்கப்பட்டதாகத் தபால் கொடுத்தனுப்புமாறு
கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதம் பழைய கோப்பு ஒன்றில் கிடைத்தது.
ஆறு நாட்கள் பயிற்சி
சிறப்பாக நடைபெற்றது. பயிற்சியின் நிறைவு நாளில் திரு.சி.வி.இராமேஸ்வர முருகன் அவர்கள்
பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார். அந்த நிகழ்வு நடந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல்
ஆகிவிட்டதால் மறந்துவிட்டேன்.
பொது நூலகத்துறை அலுவலர்
சங்க நிர்வாகிகள் இயக்குநர் திரு.வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களைப் பார்த்துக்
கோரிக்கை வைத்த போதெல்லாம் சிரித்த முகத்துடன் உடனே செய்து கொடுத்தார்.
முனைவர் ச.கண்ணப்பன் பொது நூலகத்துறை
இயக்குநராகப் பொறுப்பேற்பு:
திரு.வி.சி.இராமேஸ்வர
முருகன் அவர்களை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை
இயக்குநராக முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார். பொது நூலகத் துறை
இயக்குநர் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது.
பொது நூலகத்துறை
நூலகங்களில் பணிபுரியும் பகுதி நேர நூலகர்களுக்கும், பகுதிநேர
துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழுவில் தொகுப்பூதியம்
பெறுவோருக்கு உயர்த்தப்பட்ட 25 சதவிகித ஊதிய உயர்வு வழங்குமாறு
பல ஆண்டுகளாக இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தோம்.
ஆனால், அந்த
ஊதிய உயர்வு ‘பகுதிநேர நூலகர்களுக்கும், பகுதி
நேரத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் பொருந்தாது’ என்று
இயக்குநர் அலுவலகத்தில் சொல்லப்பட்டு வந்தது. மாற்றுச் சங்கத்தினரும் ‘இந்த
ஊதிய உயர்வு இவர்களுக்குப் பொருந்தாது’ என்றே
கூறிவந்தனர்.
கடைசி முயற்சியாக
நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவு செய்தோம். மாவட்ட நூலக அலுவலர்களை எதிர்த்து
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எந்தப் பகுதி நேரத் துப்புரவுப் பணியாளரும்
முன்வரவில்லை.
கடைசி முயற்சியாக நான்
பணிபுரியும் கடத்தூர் கிளை நூலகத்தில் பணிபுரியும் பகுதி நேரத் துப்புரவுப்
பணியாளர் பெயரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். (வழக்கு
எண். டபிள்யு.பி.129, 2015.)
இது தொடர்பாக மாநிலத்
தலைவர் திரு.ஜி. வெங்கடேசன் தலைமையில் இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்களைச்
சந்தித்து உயர் நீதிமன்ற ஆணையைக் கொடுத்து, பகுதிநேரத்
துப்புரவுப் பணியாளர்களுக்கும் பகுதிநேர நூலகர்களுக்கும் ஊதிய உயர்வுக்கான உத்தரவை
உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டோம்.
இயக்குநர் அவர்கள் உடனே
அனைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்கும் 6வது
ஊதியக்குழு பரிந்துரையின்படி 25 சதவிகித ஊதிய உயர்வு
மற்றும் நிலுவைத் தொகை வழங்குமாறு 12.06.2015
அன்று மாவட்ட நூலக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதன் மூலம்
தமிழகத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பகுதிநேர நூலகர்களுக்கும், பகுதிநேரத் துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஊதிய
உயர்வு கிடைத்தது.
அத்துடன்
நிலுவை ஊதியமாகப் பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.50,000க்கு மேலாகவும், பகுதி நேர நூலகர்களுக்கு ரூ.1,00,000 க்கும் மேலாகவும்
கிடைத்தது.
Comments